"ஓயாத அன்பின்
பெருமை உடையவனே, எல்லாச் செல்வமும்
படைத்தவனே, குருவாக வந்த நீ இக்குகையில் ஒளிந்து கொண்டிருப்பாயோ?
பாவத்தால் நிறைந்த இருளைப் போக்க, பகலவனின் உருவாய் வந்த நீ ஒளி
தராதிருப்பாயோ? உயர்ந்த வானுலகிற்கு நிகராக இம்மண்ணுலகம் களிகூரக்
கருவில் உருவாகி வந்தவனே, இக்குகையை விட்டு வெளியே வந்து,
இக்கருணையை எல்லோரும் களிப்போடு தத்தம் கண் கொண்டு அறிய
உதவுவாய்" என்று தொழுதான்.
149 |
துஞ்சுந் தன்மைத்
தெவ்வுலகுந் துணையற் றாள்வோ
னிவைகேட்டு
விஞ்சுந் தன்மைத் தோங்கவளன் விழைவே விளைக்கும்
விழிவிழித்தா
னெஞ்சுந் தன்மைத் துதவியதா னியைந்த தன்மை யுலகுணர்த்த
வஞ்சுந் தன்மைத் தெதிரிறைஞ்சு மமரர்க் குரையா
தேவலிட்டான். |
|
துஞ்சும் தன்
மைத்து, எவ் உலகும் துணை அற்று ஆள்வோன்,
இவை கேட்டு,
விஞ்சும் தன் மைத்து ஓங்க வளன், விழைவே விளைக்கும் விழி
விழித்தான்;
எஞ்சும் தன் மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு
உணர்த்த,
அஞ்சும் தன் மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது,
ஏவல் இட்டான். |
எல்லா உலகங்களையும்
எவர் துணையுமின்றி ஆள்பவனாகிய
திருக்குழந்தை தூங்கிய தன்மையாகவே இவற்றையெல்லாம் கேட்டு, சூசை
அளவற்ற தன்மையாய் எழுச்சி கொள்ளுமாறு, ஆசையைத் தூண்டும்
விதமாய்க் கண் விழித்துப் பார்த்தான்; அஞ்சிய முறையில் தன் எதிரே
வணங்கி நின்ற வானவர்க்கு வாயால் ஒன்றும் உரையாமல், தான் அளவிறந்த
விதமாய் உலகுக்கு உதவ இசைவுகொண்ட தன்மையை இவ்வுலகத்தவர்க்குச்
சென்று உணர்த்துமாறு, உள்ளக் குறிப்பால் கட்டளையிட்டான்.
உதவிய - 'உதவ'
என்று பொருள்படும் 'செய்யிய' என்னும் வாய்பாட்டு
வினையெச்சம். இடையருக்கு உணர்த்தியதனை உலகிற்கு உணர்த்தியதாகக்
கொள்க.
|