பக்கம் எண் :

முதற் காண்டம்634

                      150
ஏவும் பாலால் விண்ணவர்போ யிடையர் வந்தேற் றியவாறுந்
தூவும் பாலா லொளிபகலிற் றுளங்கு மீன்றோன் றியவாறும்
மேவும் பாலால் விரைந்திறைஞ்ச வேந்தர் மூன்றெய் தியவாறு
மாவும் பாலால் வளனுணர்வொத் தாய தன்மை யுரைசெய்வாம்.
 
ஏவும் பாலால் விண்ணவர் போய் இடையர் வந்து ஏற்றிய ஆறும்,
தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும்,
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச வேந்தர் மூன்று எய்திய ஆறும்,
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம்:

     அவ்வாறு ஏவியபடி வானவர் போய்ச் சொல்ல இடையர் வந்து திருக்
குழந்தையைப் போற்றிய விதமும், ஒளியைப் பொழியும் முறையில் பகலிலும்
துலங்கும் விண்மீன் தோன்றிய விதமும், விரும்பிய தன்மையால் அரசர்
மூவர் வணங்குமாறு விரைந்து வந்து சேர்ந்த விதமும், ஆசையின் படியே
சூசையின் உணர்வுக்கு ஒத்து நிகழ்ந்த தன்மையை மேலே சால்வோம்:

                    மகவருள் படலம் முற்றும்

                    ஆகப் படலம் 10க்குப் பாடல் 1002