வண்டு மாலையில்
மலரும் வேங்கை மலரை அடுத்துத் தேனை
உண்ணாத தன்மை போல, மன மயக்கத்தை அடைவதற்குக் காரணமான
பொன்னின்மீது பற்று வைத்துக் குற்றத்தைக் கொள்ளாதது என்று
சொல்லத்தக்க மன இயல்பு கொண்டு, மிகவும் மகிழ்ந்து, மணம்
பொருந்திய முல்லை மலர்களாற் கட்டிய மாலையும் கையுமாக இங்கு
வந்து, அவ்விடையர் குடி கொண்டவராய் நிறைந்து நிற்பர்.
ஈற்றடியில் 'ஆரும்'
என்ற 'செய்யும்' என் முற்று, 'ஆர்வர்' என்ற
பொருளில், புதியது புகுதலாகப் பலர் பாலுக்கு வந்தது. முதல்
இரண்டடிகளின் இறுதியில் வந்த 'னமன' என்ற சீர் முதற்கண்
விட்டிசைத்தலாக (ன-மன) வந்த கூவிளம் எனக் கொள்க. இச்செய்யுள்
மடக்கு அடி கொண்டது.
4 |
பஞ்ச
ரங்கி லின்ப ரங்கு பான்மை யால டைவரத்
தஞ்ச லங்கு ழித்து வந்த மிழ்ந்த மிழ்ந்து ளந்தனில்
விஞ்ச வின்ப நெஞ்ச டங்கில் மேவ லார்ந்த தம்முயி
ருஞ்ச லாடி வாயின் வாயி லுற்று ரைத்த லுற்றனர். |
|
பஞ்ச அரங்கில்
இன்பு அரங்கு பான்மையால் அடை வரத்து
அம் சலம் குழித்து, உவந்து அமிழ்ந்து, அமிழ்ந்து
உளம்தனில்
விஞ்ச இன்பம், நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம்
உயிர்
உஞ்சல் ஆடி, வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர். |
ஐம்பொறிகளாகிய
அரங்கில் இன்பம் நுகர்ந்த தன்மையால் அடைந்த
வரம் என்னும் அழகிய கடலைத் தோண்டி, அதனுள் மகிழ்ந்து மூழ்கி,
அவ்வாறு மூழ்கிய உள்ளத்தில் பேரின்பம் பெருகப் பெற்று, அப்பேரின்பம்
நெஞ்சுக்குள் அடங்காமல் மேலோங்குமாறு நுகர்ந்த தம் உயிர் ஊஞ்சல்
ஆட, வாயின் வழியாக அப்பேரின்பம் வெளிப்பட பின்வருமாறு கூறலாயினர்.
பஞ்ச + அரங்கு
- பஞ்சவரங்கு; அது 'பஞ்சரங்கு' எனத் தொகுத்தல்
விகாரமாயிற்று. உஞ்சல் - ஊஞ்சல் என்பதன் குறுக்கல் விகாரம்.
|