5 |
எண்ணு
ளேய டங்க லின்றி யேந்து மாட்சி பூண்டுவான்
விண்ணு ளேபொ லிந்து வந்த விண்ண வர்க்கு வேந்தனே
புண்ணு ளேம ருந்து நீவிப் போன வாட்டை மீட்கவோ
மண்ணு ளேயெ ழுந்து வந்து மண்ண னென்று தித்தனை. |
|
"எண் உளே அடங்கல்
இன்றி ஏந்து மாட்சி பூண்டு, வான்
விண் உளே பொலிந்து உவந்த விண்ணவர்க்கு வேந்தனே,
புண் உளே மருந்து நீவிப் போன ஆட்டை மீட்கவோ
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை? |
"எண்ணில் அடங்காமல்
உயர்ந்த மாட்சிமை பூண்டு, சிறந்த
விண்ணுலகில் பொலிவுடன் மகிழ்ந்துஇருந்த வானவர்க்கு மன்னனே,
உன்னை விட்டுப் பிரிந்துபோன ஆட்டை அதன் புண்ணுக்கு மருந்து தடவி
மீட்டுக் காக்கவென்றோ இம் மண்ணுலகிற்கு எழுந்து வந்து மனிதனாகப்
பிறந்துள்ளாய்?
கடவுளை ஆயனாகவும்
ஆன்மாக்களை ஆடுகளாகவும் உருவகித்தல்
விவிலிய மரபு (மத்தேயு 10 : 1-15). பிரிந்து போன ஆடு, பாவத்தால்
கடவுளைவிட்டு விலகிப் பேய்க்கு அடிமையான மனிதன் என்று கொள்க.
6 |
ஒண்ட
லங்க ளண்ட வும்ப ருந்தொ ழும்ப ராபரா
விண்டலங்க லந்தி லங்கு வெண்க ளங்க னொப்பெனா
மண்டலங்க ளெங்கும் யாரும் வாழ வீர வெண்குடை
கொண்ட லங்கல் கொண்ட தேறல் கொண்ட வன்பு கொற்றவா. |
|
"ஒண் தலங்கள்
அண்ட உம்பரும் தொழும் பராபரா,
விண் தலம் கலந்து இலங்கு வெண் களங்கன் ஒப்பு எனா,
மண் தலங்கள் எங்கும் யாரும் வாழ, ஈர வெண் குடை
கொண்டு, அலங்கல் கொண்ட தேறல் கொண்ட அன்பு கொற்றவா! |
"ஒளி மயமான
இடங்களைக் கொண்ட வானுலகில் வாழும் வானவரும்
தொழும் பராபரனே, இம்மண்ணுலகின் இடங்களெங்கும் யாவரும் நல்
வாழ்வடையும் பொருட்டு, வான மண்டலத்தில் தங்கி இலங்கும்
வெண்ணிறமான மதிக்கு ஒப்பென்று சொல்லத்தக்க குளிர்ச்சி பொருந்திய
வெண் கொற்றக் குடையும் கொண்டு, மாலையில் பொருந்திய தேனுக்கு
ஒப்பான இனிய அன்பும் கொண்ட மன்னவனே!
|