பக்கம் எண் :

முதற் காண்டம்641

     குறை இல்லாமல் கதிரவன் தந்த கதிரைப் போல, தன் கன்னிமைக்குப்
பழுது இல்லாமல் திருமகனைப் பெற்றெடுத்த மாலை போன்ற மரியாளின்
அடிகளில், குளிர்ந்த இன்பத்தோடு இனிய பாலை அவ்விடையர்
காணிக்கையாகத் தந்தனர். அது அவள் அடியில் ஒன்றியுள்ள மதி பிறப்பித்த
பாலொளியை ஒத்திருக்கும்.
 
                   11
பானி லத்த மைத்த வன்பு பதும நேரு கண்செயத்
தேனி லத்தி னாரை நோக்கு சிறுவ னின்பு காட்டலால்
மேனி லத்தி னாரி னொத்த விரியு காட்சி யுற்றுளம்
வானி லத்தி னார்ந்த வின்பு மலிய வாழ மாந்தினார்.
 
பால் நிலத்து அமைத்த அன்பு பதுமம் நேரு கண் செய,
தேன் நிலத்தினாரை நோக்கு சிறுவன், இன்பு காட்டலால்,
மேல் நிலத்தினாரின் ஒத்த விரியு காட்சி உற்று, உளம்
வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார்.

     தேன் நிறைந்த முல்லை நிலத்து இடையரை நோக்கிய குழந்தை
நாதன், மரியாளின் காலடியில் நிலத்தில் காணிக்கையாகப் பாலை
இட்டுவைத்த அவ்வன்பைத் தாமரை மலர்போன்ற தன் கண்களால்
நோக்கி இன்பம் ஊட்டியமையால், அவ்விடையர் மேலுலகத்தாராகிய
வானவர்க்கு ஒத்த விரிந்த அறிவைப் பெற்று, தம் உள்ளம் வானுலகில்
நிறைந்துள்ள இன்பம் மிகுதியாகப் பெற்று வாழுமாறு அருந்தினர்.
 
                   12
கன்னி யாய தாயு மோங்கு காவ லானு மன்புற
வின்னி றாலி னுங்க னிந்த வின்ப வஞ்சொ லோதலா
லுன்ன மேவு மீர வன்பு முன்ன முள்ளு றாமையான்
மின்ன மாரி தூவ லொத்த வீழு நாட்ட மாரியே.
 
கன்னி ஆய தாயும், ஓங்கு காவலானும், அன்பு உற,
இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல், ஓதலால்,
உன்னம் மேவும் ஈர அன்பு முன்னம் உள் உறாமையால்,
மின்ன மாரி தூவல் ஒத்த வீழும் நாட்ட மாரியே.