பக்கம் எண் :

முதற் காண்டம்649

என்ற வாசகம், எந்தை மனுக் குலம்
சென்ற வாய் அருள் காட்டிய சீர் உணர்வு
ஒன்றல் ஆகி உருகிய தாய், புனல்
மின் தவா விழி தூவி விளம்பினாள்:

     என்று சாந்தி கூறிய வார்த்தையும், நம் தந்தையாகிய ஆண்டவன்
மனித குலத்தில் தானும் ஒருவனாய் வந்து பிறந்த விடத்து அருள்
காட்டிய சிறப்பும், தன் உணர்வில் பொருந்தக் கொண்டு உருகிய தாயாகிய
மரியாள், மின்னொளி நீங்காத தன் கண்களினின்று நீரைப் பொழிந்த
வண்ணம் பின்வருமாறு கூறினாள்:
 
            26
அம்பி னாலப யர்செயு மத்துணை
நம்பி னார்தனி நற்செய்கை யீடிலார்
கொம்பி லேறுமி டைத்துவ ளுங்கொடி
யெம்பி ரான்வலிக் கித்துணை வேண்டுமோ.
 
"அம்பினால் அபயர் செயும் அத் துணை
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார்;
கொம்பில் ஏறும் இடைத் துவளும் கொடி;
எம் பிரான் வலிக்கு இத் துணை வேண்டுமோ?

     "அம்பினால் வீரர் தமக்குச் செய்யும் அந்தத் துணையை
நம்பியிருப்பவர், தனியாக நல்ல வீரச் செயலைச் செய்யும் வலிமை
இல்லாதவர் ஆவார்; இடையே துவளும் கொடியே கொம்பைத்
துணையாகக் கொண்டு ஏறிப் படரும்; எம் பெருமானின் வலிமைக்கு
இவ்விதத் துணையெல்லாம் வேண்டுமோ?
 
                27
வேண்டு மோர்வினை வேண்டுமென் றால்முடித்
தாண்டு மோர்தனிக் கோலர சானெரி
தூண்டு மோர்சினந் தோன்றுழி யப்பகை
தாண்டு மோர்வலி தாங்குவர் யாவரோ.