திருமகனின்
இரு வருகைகள்
- காய், - -
காய், - மா, தேமா, - - காய், - - காய், - மா, தேமா
35 |
மற்செய்கை
முதிர்ந்துயர்ந்தோ னிருகா லிங்கண்
வந்துதிப்பா னெனமறையா லறிந்தே மன்பி
னற்செய்கை தளிர்ப்பதற்கே முன்னர்த் தோன்றி
நயன்றருவான் மீண்டரிய திறத்து நீதி
பற்செய்கை காட்டவிரு வினையால் யார்க்கும்
பயன்றர நீ முன்னுரைத்த வண்ண மெய்தி
முற்செய்கை யருட்செய்கை யிக்கா லாய்ப்பின்
முனிச் செய்கை யுலகஞ்சத் தோற்றுவிப்பான். |
|
"மல் செய்கை
முதிர்ந்து உயர்ந்தோன், இரு கால் இங்கண்
வந்து உதிப்பான் என, மறையால் அறிந்தேம்; அன்பின்
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர்த் தோன்றி
நயன் தருவான்; மீண்டு அரிய திறத்து நீதி
பல் செய்கை காட்ட, இரு வினையால் யார்க்கும்
பயன் தர, நீ முன் உரைத்த வண்ணம் எய்தி,
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய், பின்
முனிச் செய்கை உலகு அஞ்சத் தோற்றுவிப்பான். |
"வலிமைச் செயல்
முதிர்ந்து யாவற்றினும் உயர்ந்தோனாகிய
ஆண்டவன், இரண்டு தடவை இவ்வுலகில் வந்து தோன்றுவான் என,
வேதநூலால் அறிந்துள்ளோம்: முதலில் அன்பு தழுவிய நற்செயல்கள்
தழைக்கச் செய்வதற்கென்று வந்து தோன்றி நன்மை தருவான்; மீண்டும்
தன் அரிய வல்லமையோடு பொருந்திய நீதியின் பல திறப்பட்ட
பயன்களைக் காட்டவும், நன்மை தீமையென்ற இரு வினைகளின் அளவுக்கு
ஏற்ப எல்லோருக்கும் பயன் தரவுமாக, நீ முன் சொல்லிய வண்ணம் வந்து
தோன்றுவான். முந்திய செயலாகிய அருளின் செய்கையை இக்காலத்தில்
நிறைவேற்றி, பின் தன் சினச் செயலைக் கண்டு இவ்வுலகம் அஞ்சுமாறு
காட்டி நிற்பான்.
|