பக்கம் எண் :

முதற் காண்டம்658

தன் அருளைக் காட்டுவான். பின், தன் முதிர்ந்த நீதியைச் செலுத்தும்
அக்காலம் அணுகிய போது, அங்கும் இவன் தானே மூன்று உலகங்களும்
கலங்கிக் கூசுமாறு, மிக்க நஞ்சைக் கக்கும் உருவத்தோடு தீர்ப்பு வழங்க
வந்து சேர்வான். அப்படி வருமுன்னர் அனுப்பிவிடும் தூது போல
இவ்வுலகில் நடக்கும் எல்லாம் எடுத்துக் கூறும் இயல்பினதோ?
 
                40
தேரெழுந்த செஞ்சுடரோ னிருண்டு மாழ்கத்
     தெண்கதிர்கால் திங்கள்முகத் திரத்தஞ் சேப்பத்
தரரெழுந்த வம்பலரோ மணியோ நாறுந்
     தாரகைக ளங்கண்விட் டிரிந்து வீழ்கப்
போரெழுந்த கதத்துடன்று திரைக டாவப்
     புயல் பாய்ந்து பொங்கியநீண் புணரி யார்ப்பப்
பாரெழுந்த பருப்பதங்க ணடுங்கிப் பேரப்
     படர்நிலத் தோர் கடையுகமென் றஞ்சா நிற்பர்.
 
"தேர் எழுந்த செஞ் சுடரோன் இருண்டு மாழ்க,
      தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப,
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும்
      தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க,
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ,
      புயல் பாய்ந்து பொங்கிய நீண் புணரி ஆர்ப்ப,
பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கிப் பேர,
     படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா, நிற்பர்.

     "தேரில் எழுந்த கதிரவன் இருண்டு மங்கவும், தெளிந்த கதிரைப்
பொழியும் மதியின் முகத்தில் இரத்த மயமாய்ச் சிவந்து தோன்றவும்,
மாலையில் பொருந்திய மணமுள்ள மலரோ, மாணிக்கமோ போலத்
தோன்றும் விண்மீன்கள் அவ்விடம விட்டு நீங்கித் தரையில் விழவும்,
போருக்கு எழுந்தது போன்ற சீற்றத்தோடு மாறுபட்டு அலைகள் தாவிப்
பாயவும், புயற் காற்று பாய்வதனால் பொங்கி எழுந்த நெடிய கடல்
முழங்கவும், பூமியில்நின்ற மலைகள் நடுங்கி இடம் பெயரவுமாக, பரந்த
நிலவுலகில் வாழும் மக்கள் உலகத்தின் முடிவு காலம் இதுவே என்று
அஞ்சி நிற்பர்.