பக்கம் எண் :

முதற் காண்டம்660

"வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம்
     வெண் பலி ஆயின பின்னர், வயத்திற்கு எஞ்சாது
உம்பரம் ஆள் தனிக் கோலான் ஏவும் தன்மைத்து,
     உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே,
அம்பரம் நான்கு ஓடி, எழும் கடலும் காரும்
     அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்சக் காளம் ஊதி,
"எம் பரமா இறைவன் இடும் தீர்வை கேட்ப
     எழுமின்!" என, எழுந்திருப்பர் மக்கள் எல்லாம்.

     "ஆண்டவனின் கொடிய பெருஞ் சினமாகிய நெருப்பினால் எரிந்த
மண்ணுலகத்தவர் எல்லாம் வெண் சாம்பலாய் மாறிய பின்னர், தன்
வல்லமையிற் குறைவுபடாது வானுலகத்தை ஆளும் தனிச் செங்கோலை
உடைய அவ்வாண்டவன் ஏவும் தன்மையால், வானவர் பலர் வில்லினின்று
விடுத்த அம்புபோல் விரைந்து சென்று, நான்கு திசைகளிலும் ஓடி, அலை
பொங்கி எழும் கடலும் கருமேகமும் முழங்கும் ஓசையும் பிற்பட
மேலோங்குமாறு எக்காளம் ஊதி, "நம் ஆண்டவனாகிய பெருங்கடவுள்
இடும் தீர்ப்பைக் கேட்க எழுங்கள்!" என்று கூறவே, மக்களெல்லாம்
எழுந்திருப்பர்.

     'அதிர்த்தவரவம்' என்பது, 'அதிர்த்தரவம்' எனத் தொகுத்தல்
விகாரமாயிற்று.

              43
ஏவுகின்ற வயத்துள்ள வுலகுமூன்று
     மெழிற்படமுன் னொன்றுமிலா துளவாக் கின்றோன்
மேவுகின்ற திருவுளமாய்ச் சொல்ல லாற்றா
     மிடறன்னா லடலையெனப் புழுதி யென்னாத்
தூவுகின்ற வுடலெல்லா மென்றாய்ச் சேர்த்தித்
     தொல்லுலகந் தொடங்கியநா டொடங்கி யிங்கண்
டாவுகின்ற மனுக்குலத்தோ ரொருவ னீங்கா
     தம்முடலைப் போர்த்தெழுந்து கலந்து நிற்பார்.
 
"ஏவுகின்ற வயத்து, உள்ள உலகம் மூன்றும்
       எழில் பட, முன் ஒன்றும் இலாது, உள ஆக்கின்றோன்,
மேவுகின்ற திரு உளம் ஆய், சொல்லல் ஆற்றா
       மிடல் தன்னால், அடலை எனப் புழுதி என்னாத்
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து இத்
       தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண்
தாவுகின்ற மனுக் குலத்தோர். ஒருவன் நீங்கா,
       தம் உடலைப் போர்த்து எழுந்து கலந்து நிற்பார்.