பக்கம் எண் :

முதற் காண்டம்673

     "இன்பமென்று பாவத்தை அருந்தி, அவ்வாறு நாம் உண்ட நஞ்சைத்
தீர்க்கக் கசப்பு மருந்தே இயல்பான வழியென்று, நாமே அம்மருந்தை
உண்டால் நல்லதே. ஆனால், அமுதத்தைத் தாங்கிய மாணிக்கக் கலம்
போன்ற இவ்வாண்டவன், நம்பால் அன்பு பூண்டு, நமக்காகத் தானே
துன்பத்தை அனுபவித்து, தானே நமக்கு மருந்தாகி, தான் துயரம்
அனுபவித்ததனால் உண்டான பயனையெல்லாம் நமக்கே தந்தருள்வான்"
என்று கூறி தாயாகிய மரியாள் தன் திருமகனை வணங்கினாள். முன்னே
துயரமும் பின்னே இன்பமும் அருந்திய வண்ணம் இவற்றையெல்லாம் கேட்டு
நின்ற இடையர் யாவரும் அவ்வாறே குழந்தையை வணங்கி நின்றனர்.
அப்பொழுது, பேரறிவால் உயர்ந்த சாந்தியும் சேர்ந்து தொழுது, பின்
வருமாறு சொல்லுவாள்;

                சாந்தியின் உருக்கம்

     - மாங்கனி, கூவிளம், கூவிளங்காய்
 
            58
வழுதாயின வின்புண நான்மனமுட்
பழுதாயின பாவியி னாலிறைவா
வழுதாய்கொலு ளைந்தயர் வாய்கொலெனாத
தொழுதாளழு தாள்பினை சொற்றுவளால்.
 
வழுது ஆயின இன்பு உண நான், மனம் உள்
பழுது ஆயின பாவியினால். இறைவா,
அழுதாய்கொல்? உளைந்து அயர்வாய்கொல்?" எனாத்
தொழுதாள்; அழுதாள்; பினை சொற்றுவள் ஆல்:

     "ஆண்டவா, நான் பொய்யான இன்பத்தை உண்டதனால் மனத்துள்
பழுது கொண்ட பாவி. இப்பாவியின் காரணமாகவே நீ அழுவாயோ?
வருந்திச் சோர்வாயோ?" என்று கூறிச் சாந்தி அழுதாள்; திருக்குழந்தையைத்
தொழுதாள்; பின்னும் தொடர்ந்து சொல்லுவாள்:

     'ஆல்' அசைநிலை. 'கொல்' ஐய வினாப் பொருளில் வந்த
இடைச்சொல்.'பினை', பின்னை என்பதன் இடைக்குறை.