பக்கம் எண் :

முதற் காண்டம்674

              59
மறமேவினர் கைவச மாகுபவீங்
குறமேவிய காதலு ளாயினையோ
திறமேவிய சீவனி யேயமுதே
யறமேயரு ளேகரு ணாகரனே.
 
"மறம் மேவினர் கை வசம் ஆகுப, ஈங்கு
உற மேவிய காதல் உள் ஆயினையோ?
திறம் மேவிய சீவனியே, அமுதே,
அறமே, அருளே, கருணாகரனே!"

     "உயிரைக் காக்கும் திறமுள்ள மருந்தே, அமுதமே, அறமே, அருளே,
கருணையின் இருப்பிடமானவனே! பாவத்தைக் கொண்டுள்ள மானிடர்
கைக்கு எட்டும் பொருளாய் அமையுமாறு, இவ்வுலகில் வந்து பிறக்கவென்று
பொருந்திய காதலுக்கு உள்ளாகினாயா?"
 
             60
சிந்தாகுல வேலையு டைத்தசெயிர்
தந்தாகுல வாசைத கைத்தகரை
யுந்தாகுப நீயுல கோர்மனுவாய்
வந்தாகுல மாகடல் மூழ்குவதோ.
 
"சிந்தா ஆகுல வேலை உடைத்த செயிர்
தந்த ஆகுல ஆசை தகைத்த கரை
உந்து ஆகுழு, நீ உலகு ஓர் மனுவாய்
வந்து, ஆகுல மா கடல் மூழ்குவதோ?"

     "மன வேதனை என்னும் கடலை உடைத்துப் பாயவிட்ட பாவத்தைக்
கொணர்ந்த பொல்லாத ஆசையைத் தடுப்பதற்கான கரையை உயரமாய்
எழுப்பும் வண்ணம், நீயே உலகத்தில் ஒரு மனிதனாய் அவதரித்து வந்து,
துயரம் என்னும் பெருங்கடலில் மூழ்குவது தகுமோ?"

     சிந்தா + ஆகுலம் - சிந்தாகுலம்: வடமொழிப் புணர்ச்சி. சிந்தை -
சிந்தை. 'தந்தவாகுலம்' எனற்பாலது, 'தந்தாகுலம்' என வந்தது தொகுத்தல்
விகாரம்.