பக்கம் எண் :

முதற் காண்டம்68

கார் அணி பசும் பொன் குன்றின் காட்சி போல் மதிளைச்
                                        சூழ்ந்து,
சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில்,
பேர் அணி எவையும் ஈட்டி, பின் அவை உவப்பின் காட்ட,
பார் அணிப் பேழை யாரும் பயன் படத் திறந்த போன்றே.

     கரு மேகத்தை மேலே அணிந்த பசும் பொன் மலையின் தோற்றம்
போல் மதிலை வளைத்துக் கொண்டு, செல்வமும் அழகுமான அனைத்தையும்
சேர்த்து வைத்த செழுமையான அந்நகரின் திறந்து கிடந்த வாயில், பெருமை
வாய்ந்த அணிகலன்கள் யாவற்றையும் இம் மண்ணுலகம் முன் சேர்த்து
வைத்து, பின் அவற்றை மகிழச்சியோடு காட்டுமாறு, தன் நகைப்
பெட்டகத்தை யாரும் கண்டு பயன்படும் வண்ணம் திறந்து காட்டியது போல்
தோன்றும்.

     'திறந்த வாயில்' பகைவர் அச்சமும் களவுக் குற்றமும் இல்லாமை
குறிக்கும்.
 
                    13
நீதிநன் முறைக ளோதி நீண்டுவீ டெய்தி வாழ்க
வீதியி தென்னக் காட்டி விரித்தநுண் ணருநூல் வேத
மாதிவந் துரைப்ப வாய்ந்த வருத்தியோ டலர்ந்த வாயே
சோதிபெய் யறத்தின் பண்பாற் சுடர் நகர் திறந்த வாயில்.
 
நீதி நல் முறைகள் ஓதி, நீண்டு வீடு எய்தி வாழ்க
வீதி இது என்னக் காட்டி, விரித்த நுண் அரு நூல் வேதம்,
ஆதி வந்து, உரைப்ப வாய்ந்த அருத்தியோடு அலர்ந்த வாயே
சோதி பெய் அறத்தின் பண்பால் சுடர் நகர் திறந்த வாயில்.

     ஒளியைப் பொழிகின்ற அறத்தின் இயல்பால் சுடர்விடும் எருசலேம்
நகரத்துத் திறந்த வாயில், எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான கடவுள்
மனிதனாய் வந்து, நல்ல நீதிமுறைகளைப் போதித்து, மக்களெல்லாம்
வீட்டுலகம் அடைந்து நீடித்து வாழ்வதற்கு வழி இதுவே என்று காட்டி,
விரிவான நுண்ணிய அரிய சேத நூலைக் கற்பிப்பதற்கென்று பொருந்திய
ஆசையோடு திறந்த தன் வாயே ஆகும்.