பக்கம் எண் :

முதற் காண்டம்680

திருவடிமேல் விழுவார்; அடியைத் தம் தலை மேல் கொள்ளுவார்; நெருங்கி
நிற்பார்; எழுவார்; அணுகுவார்; எவருமே இனிதாய்ப் பெயராது நிற்பார்.

     கொளுவார், நணுவார் என்பன இடைக்குறை விகாரங்கள்.
 
               72
இன்றேநினை யெள்ளின ரெல்லையினா
ளன்றேயறி வாரழு வாரருளைக்
கொன்றேடினர் வன்னிகு ளிப்பவரே
யென்றேதொழு வாரிளை யோர்சிலரே.
 
"இன்றே நினை எள்ளினர், எல்லையின் நாள்
அன்றே அறிவார்; அழுவார்; அருளைக்
கொன் தேடினர் வன்னி குளிப்பவரே!"
என்றே தொழுவார் இளையோர் சிலரே.

     அவருள் இளையோர் சிலர், "இன்று உன்னை எளியனென இகழ்ந்தோர்,
முடிவு நாளன்றே உன் பெருமை அறிவார்; தம் குற்றத்தை நினைந்து வருந்தி
அழுவார்; அழுது என்ன பயன்? நரக நெருப்பில் குளிக்கும் அவர்
அப்பொழுது உன் அருளை வீணே தேடியவராவர்!" என்று கூறித் தொழுவர்.
 
             73
மெய்யாகிய நின்விதி யேவிழையா
பொய்யாகிய புற்கதை பூத்தபயன்
மொய்யாகிய நாள்மொழி வாரென நீர்
மையாகிய கண்வடி வார்சிலரே.
 
"மெய் ஆகிய நின் விதியே விழையா,
பொய் ஆகிய புன் கதை பூத்த பயன்,
மொய் ஆகிய நாள் மொழிவார்!" என நீர்
மை ஆகிய கண் வடிவார் சிலரே. வேறு சிலர்,

     "உண்மையான உனது வேத விதிகளை விரும்பாமல், பொய்யான
அற்பக் கதைகளைக் கேட்டு மலர்ந்து நின்றதன் பயனை, எல்லோரும்
ஒன்றாக மொய்த்து நிற்பதாகிய இறுதித் தீர்ப்பு நாளில் அத்தகையோரே
எடுத்துக் கூறுவர்!" என்று கூறி, தம் கருமையான கண்ணினின்று நிர் வடிய
நிற்பார்.