பக்கம் எண் :

முதற் காண்டம்682

                இயற்கையின் மகிழ்ச்சிச் சிரிப்பு

            76
சிலர்செய்துதி சீரிய தோவதென
வலர்வைகிய தேனளி பாடுவன
பலர்பெய்கமழ் நீர்ப்பணி கோததென
மலர்மல்கிய தேன்மழை தூவுவன.
 
சிலர் செய் துதி சீரியதோ அது என,
அலர் வைகிய தேன் அளி பாடுவன.
பலர் பெய் கமழ் நீர்ப் பனி கோதுது என,
மலர் மல்கிய தேன் மழை தூவுவன.

     திருக் குழந்தைக்கு சிலர் செய்யும் வாழ்த்தாகிய அது சிறந்ததோ
என்று இகழ்ந்தது போல், மலர்களில் அமர்ந்திருந்த தேனீக்கள் பாடும்.
பலரும் சொரிந்த மணமுள்ள பன்னீர் குற்றமுள்ளது என்று காட்டுவது
போல், மலர்கள் தம்மிடம் பெருகி நின்ற தேனை மழை போல் தூவும்.

     'துதி அது' எனவும் 'பனி நீர்' எனவும் சேர்த்துக் கூட்டிப் பொருள்
செய்க.
 
           77
திருமுற்றுறை சிந்திய காரிதென
வருபற்சிகி வால்சிற காடுவன
பருவத்திருள் நீக்கிய பானிதெனக்
குருநற்குயில் கொம்புயர் கூவுவன.
 
திரு முற்று உறை சிந்திய கார் இது என,
வரு பல் சிகி வால் சிறகு ஆடுவன,
பருவத்து இருள் நீக்கிய பானு இது என,
குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன.

     செல்வங்கள் யாவற்றையும் துளியாகப் பொழிந்த கருமேகமே
இக்குழந்தை என்று கண்டு மகிழ்ந்தது போல், அங்கு வந்து சேர்ந்து பல
மயில்கள் தம் வாலையும் சிறகையும் விரித்து ஆடும். இருளை நீக்கிய
வேனிற் பருவத்து பகலவனே இது என்று உணர்ந்த தன்மையாய்,
நிறமுள்ள நல்ல குயில்கள் மரக் கொம்புகளின் மேலே அமர்ந்து கூவும்.