பக்கம் எண் :

முதற் காண்டம்683

     கார் காலம் மயிலுக்கும் வேனிற் காலம் குயிலுக்கும் மகிழ்ச்சி தருவன.
 
             78
விரைமாறில தேன்விளை பூவிதென
நிரைதேனிறை வண்டொடு பாடுவன
கரைநீத்தமு தின்கட லேயிதென
வுரையாற்றுதி யொண்கிளி பேசுவன.
 
விரை மாறு இல தேன் விளை பூ இது என,
நிரை தேன் நிறை வண்டொடு பாடுவன.
கரை நீத்த அமுதின் கடலே இது என,
உரை துதி ஒண் கிளி பேசுவன.

     மணம் மாறாத நிறைந்த பூவே இக்குழந்தை என்று கருதியதுபோல்,
வரிசை பிடித்த தேனீக்கள் வண்டுகளோடு சேர்ந்து பாடும். கரையில்லாத
அமுதக் கடலே இது என்று தெரிந்தது போல், ஒளியுள்ள கிளிகள்
பொருளுள்ள சொல்லால் வாழ்த்துக்களைப் பேசும்.

     'நீத்தவமுது' எனற் பாலது. 'நீத்தமுது' எனத் தொகுத்தல்
விகாரமாயிற்று.
 
             79
இவ்வாறிமி ழெல்லையு மில்லையென
வவ்வாறணு காயரு மன்பினொடு
செவ்வாறுள மேவிய சீர்பலநாள்
வவ்வாறுரை வவ்விய வாறதுவோ.
 
இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என,
அவ்ஆறு அணுகு ஆயரும் அன்பினொடு,
செவ் ஆறு உளம் மேவிய சீர் பல நாள்
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறதுவோ?

     இவ்வாறு, அங்கு அமைந்து கிடந்த இன்பத்திற்கு எல்லையே
இல்லையாக, அவ்விடத்து அணுகிய இடையரும் அன்பைப் பெற்றதனோடு,
செவ்விய விதமாய்த் தம் உள்ளம் விரும்பிய நன்மைகளைப் பல நாளும்
சென்று அள்ளிக் கொண்ட தன்மை, என் உரையால் அமைத்துக் காட்டும்
தன்மையதோ?