| 82 |
மைவிண்
மேலாள் வோன்றனை யேந்தும் வளனோங்க
மொய்விண் ணேருட் டூவிய ஞான முறையெல்லாம்
பெய்விண் ணீருண் டேமலை யாறாய்ப் பிளிர்வன்ன
மெய்விண் டம்பூ வாய்வழி கால்வான் வினை தீர்த்தான். |
| |
மை விண் மேல்
ஆள்வோன், தனை ஏந்தும் வளன் ஓங்க,
மொய் விண் நேர் உள் தூவிய ஞான முறை எல்லாம்,
பெய் விண் நீர் உண்டே மலை ஆறாய்ப் பிளிர்வு அன்ன,
மெய் விண்டு, அம் பூ வாய் வழி கால்வான், வினை தீர்த்தான்.
|
மேகங்களைக்
கொண்ட வான்மேல் இருந்து எல்லாம் ஆளும்
குழந்தைநாதன், தன்னை ஏந்தி வளர்க்கும் சூசை உயர்வடையுமாறு,
மொய்த்துப் பொழிந்த மேகம் போல் ஞானமுறைகளையெல்லாம் அவன்
உள்ளத்தில் பொழிந்தான். தீவினையெல்லாம் அறவே நீங்கப் பெற்றவனாகிய
சூசை, பெய்யும் மழைநீரை மலை ஏற்றுக்கொண்டு ஆறாய்க் கொப்புளித்தல்
போல், அவற்றை மெய்யோடு பொருந்தச் சொல்லி, தனது அழகிய மலர்
போன்ற வாய் வழியே பாய விடுவான்.
| 83 |
செல்வாய்
நின்ற வம்முழை சென்றா ரெவருண்டோ
வில்வாய் விண்ட பூங்குழ விக்கண் விளைஞானம்
வல்வா யுண்ட மாதவ னன்னூன் மறைகூறுஞ்
சொல்வாய் மல்குந் தூயற முற்றார் துகடீந்தார். |
| |
செல் வாய் நின்ற
அம் முழை சென்றார் எவர் உண்டோ,
வில் வாய் விண்ட பூங் குழவிக்கண் விளை ஞானம்
வல் வாய் உண்ட மா தவன், நல் நூல் மறை கூறும்
சொல் வாய், மல்கும் தூய் அறம் உற்றார்; துகள் தீர்ந்தார். |
எவரும் செல்லத்
தக்கவாறு வாய் திறந்து நின்ற அக்குகையை அணுகிச்
சென்றவர் எவர் உண்டோ அவரெல்லாம், ஒளி பொருந்திய தன் வாயைத்
திறந்த அளவாலே மலர்போன்ற அக்குழந்தையினிடமாய் விளைந்த
ஞானத்தை, தானும் அறிய வல்லதோர் அரிய முறையால் அறிந்து கொண்ட
பெருந் தவத்தோனாகிய சூசை விளக்கும் நல்ல வேத நூல் கருத்துக்களை
எடுத்துக்கூறும் சொல்லின் மூலமாக, பெருகி வளரும் தூய அறத்தைக்
கைக்கொண்டனர்; அதன் மூலம் பாவமெல்லாம் நீங்கப் பெற்றனர்.
|