பக்கம் எண் :

முதற் காண்டம்686

திருமகன் வாய் திறந்து பேசிற்றிலன் என்பது, பின் 24வது சோகு தோர்வைப்
படலம், 61-ம் பாடலில், "ஓராண்டு உரையாதபின்" எனவும், 62-ம் பாடலில்,
"இனிது எந்தையென்று ஓதினான்" எனவும் வருதலால் உணரலாகும்.
 
                    84
புன்மை கொண்டா ரவ்வழி போயப் புடையார்ந்த
வின்மை கண்டா லெள்ளுவ ரெள்ளா திவர்நிற்குந்
தன்மை கண்டே நூல்வடி வோன்சொற் றகைகேட்டால்
நன்மை கொண்டே நற்புக ழோதி நடைகொள்வார்.
 
புன்மை கொண்டார் அவ் வழி போய், அப் புடை ஆர்ந்த
இன்மை கண்டால் எள்ளுவர்; எள்ளாது இவர் நிற்கும்
தன்மை கண்டே, நூல் வடிவோன் சொல் தகை கேட்டால்,
நன்மை கொண்டே, நல் புகழ் ஓதி நடை கொள்வார்.

     புல்லறிவு படைத்தோர் அவ்விடத்தே போய், அப்பக்கம் நிறைந்து
கிடந்த வறுமையைக் கண்டதும் இகழ்ந்து பேசுவர்; அவர்களை இகழாமல்
பொறுமையோடு இத்திருக் குடும்பத்தினர் நிற்கும் தன்மை கண்டும், தேவ
நூல் வடிவமான சூசை சொல்லும் கருத்தின் உயர்வைக் கேட்டறிந்தும்,
நன்மை அடைந்து, இவர் தம் நல்ல புகழை எடுத்துக் கூறித் திரும்பிச்
செல்வர்.
 
                    85
பாரார் கங்குல் பானொளி முன்னர் பரவுண்டோ
வேரார் வில்செய் முச்சுட ரன்னா ரிவரைக்கண்
டாரா ருள்ளா ராசிரு ணீங்கா தவணுண்டோ
தேரா ருண்டோ தேர்ந்தடை வார்க்கோர் சிதைவுண்டோ.
 
பார் ஆர் கங்குல்பானு ஒளி முன்னர் பரவு உண்டோ?
ஏர் ஆர் வில் செய் முச் சுடர் அன்னார் இவரைக் கண்டு,
ஆர் ஆர், உள் ஆர் ஆசு இருள் நீங்காது, அவண் உண்டே?
தேரார் உண்டோ? தேர்ந்து அடைவார்க்கு ஓர் சிதைவு                                        உண்டோ?

     மண்ணுலகில் நிறைந்துள்ள இரவின் இருள் ஆதவன் ஒளியின்
முன்னர்ப் பரவுதல் உண்டோ? அழகு நிறைந்த ஒளியைத் தரும் மூன்று
சுடர்கள் போன்றவராகிய இவரைக் கண்டு, கண்ட அவ்விடத்தில் தானே தம்