பக்கம் எண் :

முதற் காண்டம்687

உள்ளத்தில் நிறைந்துள்ள பாவ இருள் நீங்கப்பெறாதவர் யாரேனும்
உண்டோ? கண்டதும் தெளிவு பெறாதவர் உண்டோ? அவ்வாறு தெளிவு
பற்று, இவரைச் சரணடைவார்க்கு ஒரு கேடும் உண்டோ?

     முச்சுடர்: ஞாயிறு, திங்கள், விண்மீன். 'கங்குல்' அக்கங்குலில்
அமைந்த இருளுக்கு ஆகுபெயர்.
 
                      86
துன்பா லிங்க ணாங்குலை வெல்லாந் துகடீர்த்தோன்
தன்பா லென்றே தானயர் வுற்றான் றனையுற்றா
ரின்பா லெஞ்சா வாழ்வது தம்பா லெனவிட்டா
னன்பா லஃகா தோருயி ரன்னா னமுதன்னான்.
 
துன்பால் இங்கண் ஆம் குலைவு எல்லாம், துகள்
                                   தீர்த்தோன்,
தன்பால் என்றே, தன் அயர்வு உற்றான்; தனை உற்றார்
இன்பால் எஞ்சா வாழ்வது தம் பால் என விட்டான்,
அன்பால் அஃகாது ஓர் உயிர் அன்னான், அமுது
                                   அன்னான்.

     பாவத்தைத் தீர்க்க அக்குகையில் வந்து பிறந்தவனும், அன்பில்
குறைவுபடாது அனைவர்க்கும் ஒப்பற்ற உயிர் போன்றவனும், அமுதம்
போன்றவனுமாகிய ஆண்டவன், துன்பத்தால் இவ்வுலகில் ஏற்படும்
குலைவுகளையெல்லாம் தன் பங்கென்று கொண்டு, தளர்ச்சியெல்லாம்
தானே தாங்கினான்; தன்னைச் சார்ந்தவர் இன்பத்தில் குறைபடாது
வாழ்வது தம் பங்கென்று விட்டுக் கொடுத்தான்.

     'துகள் தீர்ப்போன்' என்பது உறுதி பற்றி, 'தீர்த்தோன்' என இறந்த
காலத்தாற் கூறப்பட்டது.

             இயேசு பெயர்ப் பெருமை

     -மா, கூவிளம், -விளம், -விளம், -மா  

                       87
அணிக்க லத்தழ கழுந்திய வுருக்கொடு வமரர்
மணிக்க லத்தமு துய்த்தென வணங்கியாங் குய்த்த
பிணிக்க லத்திடைக் கிடந்துறை குழவிதன் பெயரைப்
பணிக்க லத்திடைப் படைத்துல குய்ந்தெழப் பகர்வாம்.