பக்கம் எண் :

முதற் காண்டம்689

வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன
                                வண்ணத்து,
அம் பொன் மார்பின் மேல், அழல் கொழுந்து அழற்று என
                                அணிந்த
செம் பொன்னால் திரு நாமமே, செறிந்த பேர் அணியாய்ப்
பைம் பொன் மேனியர், பரப்பு ஒளி பருகி, வில் செயும் ஆல்.

     புதிய பொன்னாடையின் மேல் செம்பொன்னால் வரைந்தது போல்
அழகிய பொன்மயமான மார்பின் மேல், நெருப்புக் கொழுந்து எரிவது
போல் தாம் அணிந்திருந்த செம்பொன்னாலாகிய திருப்பெயரானது, பசும்
பொன்மேனியை உடைய அவ்வானவர் நெருங்கிய பெரும் படையணியாய்
நின்று பரப்பிய ஒளியையெல்லாம் விழுங்கி, தானே அவற்றிலும் மேலாக
ஒளி தந்து தோன்றும்.

     திருப்பெயர் - இயேசு என்னும் திருப்பெயர்: 'புதுமை'
எனப்பொருள்படும் 'வம்பு' என்ற சொல், கடைக்குறையாய், 'வம்' என
நின்றது. பைம் பொன் - பசுமை + பொன்.

                   90
அங்க ளைத்தெளித் தகனறு மலர்கொடு மார்பிற்
றிங்க ளைத்தெளித் திட்டென நாமப்பூண் டியங்க
வெங்க ளைத்தெளித் துயர்த்திய விறைவவென் றிறைஞ்சி
மங்க ளத்தெளித் திருப்புகழ் விழங்குபு வதிந்தார்.
 
அங்களைத் தெளித்து, அகல் நறு மலர் கொடு, மார்பில்
திங்களைத் தெளித்து இட்டு என நாமம் பூண் தியங்க,
"எங்களைத் தெளித்து உயர்த்திய இறைவ!" என்று இறைஞ்சி,
மங்களத் தெளித் திருப் புகழ் வழங்குபு வதிந்தார்.

     அழகுகளை எங்கு வாரி இறைத்து, பரந்து நறுமண மலர்களைக்
கையில் ஏந்திக் கொண்டு, மதியின் ஒளியைத் தெளித்து இட்டு வைத்தது
போன்ற திருப்பெயர் அணி மார்பில் கிடந்து அசைய, அவ்வானவர்,
"எங்களைத் தெளிவித்து உயர்த்திய ஆண்டவனே!" என்று கூறி வணங்கி,
தெளிவான மங்களப் பொருள் அமைந்த திருப்புகழ்களை வழங்கிய
வண்ணம் இருந்தனர்.