|
'மணி' என்ற
இரத்தினப் பொதுப் பெயர், நிறம் பற்றி, பசுமையால்
மரகதத்தையும், செம்மையால் பவளத்தையும், வெண்மையால்
வைரத்தையும் குறிப்பதாயிற்று.
| 93 |
வருந்த
மாசடை மனுக்குலம் புரந்திட லிவனாற்
பொருந்த லாமெனப் புரவல னென்றொக்கு நாமந்
திருந்த யேசுவே செப்புதீ ரெனமிக்க யேலாங்
கிருந்த வானவ ரிடையிடை விருப்பெழீஇத் தொழுதார். |
| |
"வருந்த மாசு
உடை மனுக் குலம் புரந்திடல் இவனால்
பொருந்தல் ஆம் என, புரவலன் என்று ஒக்கும் நாமம்
திருந்த, 'யேசுவே!' செப்புதீர்" என மிக்கயேல், ஆங்கு
இருந்த வானவர் இடையிடை விருப்பு எழீஇத் தொழுதார். |
மிக்கயேல் என்ற
வானவன், "வருந்தத் தக்க பாவ மாசு கொண்ட
மனித குலத்தை மீட்டுக் காத்தல் இவனால் பொருந்துவதாகும் என்பதனால்,
காப்பவன் என்று பொருளால் ஒக்கும் பெயர் திருந்த அமையுமாறு,
'யேசுவே!' என்று சொல்லுங்கள்," என்றான். எனவும், அங்கிருந்த வானவர்
ஆர்வம் மிகக்கொண்டு, இடையிடையே அப்பெயர் சொல்லித் தொழுதனர்.
'இயேசு' என்ற
எபிரேயப் பெயர், மீட்பர் எனப் பொருள்படும்.
(மத். 1 : 24).
| 94 |
முருடொ
டுந்திசை முழுவதும் பல்லிய முழங்க
வருடொ டுந்திசை யந்தர மளவில களிப்ப
மருடொ டுந்திசை வையக மினிதயர் வுயிர்ப்ப
விருடொ டுந்திசை யிடியொடு நடுநடுங் கினவே. |
| |
முருடொடும் திசை
முழுவதும் பல் இயம் முழங்க,
அருள் தொடும் திசை அந்தரம் அளவு இல களிப்ப,
மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப,
இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே. |
அப்பெயர் கேட்டதும்,
திசை முழுவது பறையோடு பல இசைக்
கருவிகளும் முழங்கின. தெய்வ அருள் தங்கும் திசையாகிய வானுலகம்
அளவில்லா மகிழ்ச்சி கொண்டது. பாவ மயக்கம் தங்கும் திசையாகிய
இம்மண்ணுலகம் சோர்வு நீங்கி இன்பம் கண்டது. இருள் தங்கும்
நரகத்தின் திசைகளெல்லாம் இடியால் நடுநடுங்கின.
|