| 95 |
பிணத்தி
னங்களை நடுக்குறும் பெற்றிமா தவனுங்
கணத்தி னங்களை முடிபுனை கன்னியந் தாயுங்
குணத்தி ணங்கிய குருமணி திருந்திய நாமம்
மணத்தி ணங்கினர் வணங்கலின் மிக்கயே லுரைப்பான். |
| |
பிணத்து இனங்களை
நடுக்கு உறும் பெற்றி மா தவனும்,
கணத்து இனங்களை முடி புனை கன்னி அம் தாயும்,
குணத்து இணங்கிய குரு மணி திருந்திய நாமம்
மணத்து இணங்கினர் வணங்கலின், மிக்கயேல் உரைப்பான்: |
பேய்க்கூட்டங்களை
நடுங்கச் செய்யும் இயல்யுள்ள
பெருந்தவத்தோனாகிய சூசையும், விண்மீன் கூட்டங்களை முடியாக
அணிந்துள்ள கன்னித் தாயாகிய மரியாளும், திருமகனின் இயல்பிற்குப்
பொருந்தியதும் செந்நிறப் பவளத்தினும் சிறந்ததுமாகிய அப்பெயருக்கு
ஒருமித்து இணங்கி வணங்கவே, மிக்கயேல் பின்வருமாறு கூறுவான்:
| 96 |
இத்தி
றத்திலு மித்தகை யேந்திய நாமங்
கைத்தி றத்திலுங் களிப்புறக் கூப்பிய ருரைப்ப
மைத்தி றத்திலுண் மயங்கிய சிதைவெலாங் கடிந்து
மெய்த்தி றத்திலும் விளைந்தநன் றியம்புதல் பாலோ. |
| |
"இத் திறத்திலும்,
இத் தகை ஏந்திய நாமம்,
கைத் திறத்திலும், களிப்பு உற, கூப்பியர், உரைப்ப,
மைத் திறத்தில் உள் மயங்கிய சிதைவு எலாம் கடிந்து,
மெய்த் திறத்திலும் விளைந்த நன்று இயம்புதல் பாலோ?" |
"குணத்தோடு பொருள்
பொருந்துதலாகிய இவ்வகையிலும், இத்தகைய
பெருமையால் உயர்ந்த திருப்பெயரை மனம் களிப்புற நினைத்தலோடு,
கைத்திறத்தாலும் கும்பிட்டவராய், நாவாலும் சொல்லவே, இருளின்
தன்மையில் உள்ளத்தில் மயக்கம் தந்து நின்ற பாவக் கேடெல்லாம் நீங்கப்
பெற்று, அவர்தம் உடலின் அளவிலும் விளையக் கூடிய நன்மை எடுத்துக்
கூறும் இயல்பினதோ?"
|