பக்கம் எண் :

முதற் காண்டம்694

                  99
இன்ன வின்புறு மினியவித் திருப்பெயர் தன்னைப்
பன்ன வின்புறும் பன்னிய வாயுமுள் வணங்கி
யுன்ன வின்புறு முன்னிய வுன்னமு மதனைத்
துன்ன வின்புறுந் துன்னிய திசையெலா மன்றோ.
 
"இன்ன இன்பு உறும் இனிய இத் திருப் பெயர் தன்னைப்
பன்ன, இன்பு உறும் பன்னிய வாயும்; உள் வணங்கி
உன்ன, இன்பு உறும் உன்னிய உன்னமும்; அதனைத்
துன்ன இன்பு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ! "

     "இத்தகைய இன்பத்தைத் தரும் இனிய இத் திருப்பெயரை சொல்லவே,
சொல்லிய வாயும் இன்பம் அடையும்; உள்ளத்தால் வணங்கி நினைக்கவே,
நினைத்த மனமும் இன்பம் அடையும்; அப்பெயர் அதை அடுத்திருக்கவே,
அடுத்த திசைகளெல்லாம் இன்பம் அடையும்! "

     'அன்றோ' அசைநிலை.

                    100
வான மேலவர் வணங்கிய விப்பெயர் தன்னாற்
றான மேதவந் தகையருள் பொறைபுகழ் வளர்ந்து
ஞான மேபயில் நன்றெலா மிகுத்துயிர் பிரித
லான வேலையி லனந்தவீ டமைதலா மென்றான்.
 
"வான மேலவர் வணங்கிய இப் பெயர் தன்னால்,
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து,
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து, உயிர் பிரிதல்
ஆன வேலையில் அனந்த வீடு அமைதல் ஆம்!" என்றான்.

     "வானத்திலுள்ள வானவர் வணங்கிய இப்பெயரால், தானத்தோடு
தவம் பெருமை அருள் பொறுமை புகழ் போன்றவை வளர்ந்து, ஞானத்தால்
விளையும் நன்மையெல்லாம் மிகுந்து, உயிர் பிரியும் வேளையில் என்றும்
முடிவு பெறாத வீட்டுலகமும் கைகூடுவதாகும்!" என்று மிக்கயேல் கூறினான்.