பக்கம் எண் :

முதற் காண்டம்695

                101
என்ற காலையி லின்னிசை மகரயா ழுளரி
நன்ற ளாவிய நயத்தமிழ்ந் தாசியை நவின்று
குன்ற ளாவிய குன்றில முகில்பொழி மழைபோன்
மன்ற ளாவிய மலர்மழை வழங்கினர் வானோர்.
 
என்ற காலையில், இன் இசை மகர யாழ் உளரி,
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து, ஆசியை நவின்று,
குன்று அளாவிய குன்று இல முகில் பொழி மழை போல்,
மன்று அளாவிய மலர் மழை வழங்கினர் வானோர்.

     என்று இவ்வாறு மிக்கயேல் கூறிய வேளையில், ஏனைய வானோர்,
இனிய இசையை மகர யாழ் தடவிப் பாடி, நன்மை தழுவிய இன்பத்தில்
மூழ்கி, வாழ்த்துக் கூறி, மலையைத் தழுவிய மேகம் குறையாது பொழிந்த
மழைபோல், மணம் தழுவிய மலர் மழையைப் பொழிந்தனர்.

     'குன்று அளாவிய முகில் குன்று இல பொழி மழை' என மாற்றிக்
கூட்டுக. மன்று-மன்றல் என்பதன் கடைக்குறை.

                     102
மின்னு மாமகன் மேனிகொண் டுதித்தவெண் பகலாய்ப்
பன்னு மாமறை பயில்வரை விளித்தரு மன்பின்
மன்னு மாமறை வகுத்தநன் முறைகளைத் தவிரா,
துன்று மாணுடைத் தூய்திரு நாமமிட் டனரே.
 
மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய்,
பன்னு மா மறை பயில்வரை விளித்து, அரும் அன்பின்
மன்று மா மறை வகுத்த நல் முறைகளைத் தவிரா,
துன்னு மாண் உடைத் தூய் திரு நாமம் இட்டனரே.

     ஒளி வீசும் சிறந்த மகன் உடலெடுத்துப் பிறந்த எட்டாம் நாள்
ஆகவே, சூசையும் மரியாளும், ஆராயத் தக்க சிறந்த வேதத்தைக்
கற்றறிவாராகிய குருக்களை அழைத்து, அரிய அன்போடு, நிலை பெற்ற
சிறந்த வேதம் வகுத்த நல்ல சடங்கு முறைகளில் எதனையும்
தப்பவிடாமல், நிறைந்த மாண்புள்ள இயேசு என்னும் தூய திருப்பெயரை
அவனுக்கு இட்டனர்.