பக்கம் எண் :

முதற் காண்டம்700

     பெருகிய ஒளியை இரவும் பகலும் மாறாமல் பொழிந்து நின்ற ஒரு
விண் மீனே மூவர்க்கும் வழியைக் காட்டியமையால், வேறு வேறாய்ச்
செல்லுதல் இன்றி, ஒரே தடத்தை வந்தடைந்த மூவரசரும் ஒன்று சேர்ந்து,
மேன்மையிற் சிறந்து, அளவில்லாது மகிழ்ச்சி கொண்டு, தம் கருத்தெல்லாம்
தமக்குள் எடுத்து உணர்த்தி உணர்ந்து கொண்டு, வளமெல்லாம் எல்லை
இல்லாது கொண்டு கருணையும் நிறைந்த ஆண்டவனை வணங்குவதற்காகச்
சேர்ந்து சென்றனர்.
 

                       108
மிடையடைந்த மணிகுயிற்றி வெயிலெறிக்கும் பொற்கொடிஞ்சி
                               மின்றே ரீட்டங்
குடையடைந்த பரிகளொடு குன்றருவி மதமாறாக் கும்பி யீட்டம்
டையடைந்த பகைவருரம் பாய்ந்துணுமூ னுமிழ்வடிவேற் படைய
                               ரீட்டம்
மடையுடைந்த கடலுடைத்த மயக்கடைந்து நெருங்கிற்றே வைய
                               மெல்லாம்.
 
மிடை அடைந்த மணி குயிற்றி வெயில் எறிக்கும் பொன் கொடிஞ்சி
                                 மின் தேர் ஈட்டம்,
குடை அடைந்த பரிகளொடு, குன்று அருவி மதம் மாறாக் கும்பி
                                 ஈட்டம்,
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன் உமிழ் வடி
                                 வேல் படையர் ஈட்டம்,
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே
                                 வையம் எல்லாம்.

     நெருக்கமாக அமைந்த மணிகள் பதித்து ஒளியைப் பரப்பும்
பொன்மயமான தேர் மொட்டைக் கொண்ட மின்னல் போன்ற தேர்களின்
கூட்டமும், குடையைத் தாங்கிய குதிரைகளின் கூட்டமும், குன்றினின்று
பாயும் அருவி போல் மதநீர் பாய்தல் மாறாத யானைகளின் கூட்டமும்,
படைக்கலன் தாங்கிய பகைவரின் மார்பில் பாய்ந்து உண்ணும், ஊனைச்
சிதறும் கூர்மையான வேலை உடைய காலாட் படையினர் கூட்டமுமாக,
மடை உடைந்த கடல் கரையையும் உடைத்துக் கொண்டு பாய்ந்தது
போல் தம்முள் கலந்து, அப்படை உலகமெங்கும் நெருங்கிச் சென்றது.