மூன்று உலகங்களையும்
பொதுவென்று இல்லாமல் தானே தனியாய்
ஆளும் நிறை அருள் மன்னனாகிய குழந்தை நாதன், இம்மூவரையும்
ஆர்வத்தோடு நோக்கி, வாயால் சொல்லாமல், இப்பூவுலகும் இவரோடு
சேர்ந்து களிகூருமாறு, தன் மலர்க் கையை அசைத்து நல்லாசி
வழங்கியதோடு, பொருந்திய அளவு ஒன்றும் இல்லாமல் வெள்ளம்போல்
வரங்களெல்லாம் நிறையத் தந்தான். தரவே இம்மூவரும் தெய்வவுலகிற்கு
நிகரான இன்பங் கொண்டு, எண்ணற்ற வாழ்த்துக்களை அக்குழந்தைக்குச்
செலுத்தினர்.
116 |
அருத்தியொடு
மன த்தோங்கி யனிச்சையினொய் யடிசிரமே
லணுகிச் சேர்த்திக்
கருத்தினொடு கண்ணிலொற்றிக் கண்ணுகுநீர் முத்தெனக்காற்
கழற்போன் மாற்றி
யிருத்தியொடு முலைதழுவு மிளையோர்போல் வாய்பொருத்தி
யிருமுத் தேற்றி
வருத்தினொடு மனத்தின்ப மகிழ்வெல்லை யில்லையென
வரைவில் வாழ்ந்தார். |
|
அருத்தியொடு
மனத்து ஓங்கி, அனிச்சையில் நொய் அடி சிரம்
மேல் அணுகிச் சேர்த்தி,
கருத்தினொடு கண்ணில் ஒற்றி, கண் உகு நீர் முத்து எனக் கால்
கழல் போல் மாற்றி,
இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல் வாய் பொருத்தி
இரு முத்து ஏற்றி,
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என,
வரைவு இல் வாழ்ந்தார். |
அன்போடு மனத்துள்
எழுச்சி கொண்டு, அனிச்ச மலரினும் மெல்லிய
திருவடிகளைத் தம் தலைமேல் பொருந்தச் சேர்த்து, தம் கருத்தில்
ஒற்றிக்கொண்டதோடு கண்களிலும் ஒற்றிக்கொண்டு, தம் கண்களினின்று
சொரியும் நீரை முத்தாகக் கொண்டு அக் கால்களுக்குக் கழல் போல் மாற்றி
இட்டு, ஆசையோடு தாயின் முலையைத் தழுவும் குழந்தைகள் போல்
வாயைக் காலோடு பொருத்தி ஒரு தடவைக்கு இரு தடவையென்று முத்தம்
பதித்து, முன் கொண்ட வருத்தத்தோடு இப்பொழுது மனத்துக்கொண்ட
இன்ப மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்னும்படி, எல்லையில்லாத
வாழ்வு பெற்றவரானார்.
|