பக்கம் எண் :

முதற் காண்டம்713

பன்னிரண்டாவது
 

மகனேர்ந்த படலம்
 


     சூசையும் மரியாளும், யூதர் திருச்சட்ட முறைப்படி, திருமகனைக்
கடவுளுக்குக் காணிக்கையாகக் கோவிலில் நேர்ந்து கொடுத்ததைக் கூறும்
பகுதி. 'மகன் நேர்ந்த படலம்' எனப் பிரிக்க.

                   எருசலேம் பயணம்

     -மா, -மா, - -காய், -மா, -மா, - -காய்
 
                   1
இந்நீ ரன்னார்க் கெண்ணைந்நா ளினிதி லங்கட்
                               போயினபின்
மெய்ந்நீ ருடுத்தீங் கவதரித்து விள்ளா முகையாந்
                               திருமகன்றன்
னந்நீர் முகத்திற் றுகடுடைத்திவ் வவனிக் கெங்கும்
                               பயன்பயப்ப
முந்நீ ரெழுந்த விளங்கதிர்போன் மூதூர்ப் புறம்வந்
                               ததுசொல்வாம்.
 
இந் நீர் அன்னார்க்கு எண் ஐந் நாள் இனிதில் அங்கண்
                             போயின பின்,
மெய் நீர் உடுத்து ஈங்கு அவதரித்து விள்ளா முகை ஆம்
                             திரு மகன், தன்
அம் நீர் முகத்தின் துகள் துடைத்து இவ்வவனிக்கு எங்கும்
                             பயன் பயப்ப,
முந்நீர் எழுந்த இளங் கதிர் போல், மூது ஊர் புறம் வந்தது
                             சொல்வாம்.

     இத்தன்மையாய் அவர்களுக்கு இச்சிறு வீட்டில் நாற்பது நாள்
இனிதாகக் கழிந்தபின், உடலின் தன்மையை உடுத்த வண்ணமாய் இவ்வுலகில்
அவதரித்து விரியாத மொட்டுப்போல் விளங்கும் திருமகன், தன் அழகிய
இயல்புள்ள முகத்தினால் பாவங்களைத் துடைத்து இவ்வுலகிற்கெல்லாம்
பயன் விளைவிக்குமாறு, கடலில் எழுந்த இள ஞாயிறுபோல், பழமையான
எருசலேம் நகர்ப்பக்கம் வந்து சேர்ந்ததைப் பற்றி தொடர்ந்து கூறுவோம்.

     எண் ஐந்நாள் - 8 * 5 நாள்: 40 நாள். முதுமை + ஊர் - மூதூர்.