பக்கம் எண் :

முதற் காண்டம்714

                      2
நிறைநீத் தெசித்தார் பகைமுற்றி நெடுநாள் சிறைசெய்
                                   தியூதர்கடம்
மிறைநீத் துயர்ந்த குலமெல்லாம் விடைத்தா ரென்னா
                                   விடைத்திறையோன்
குறைநீத் தெல்லாத் தலைமகரைக் குலைய வொன்னார்
                                   தான்கொன்று
சிறைநீத் தியூத ரமுதொழுகுந் திருநா டமைத்தி யருள்செய்தான்.
 
நிறை நீத்து எசித்தார், பகை முற்றி, நெடு நாள் சிறை செய்து,
                                         யூதர்கள் தம்
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம், விடைத்தார் என்னா, விடைத்து
                                         இறையோன்,
குறை நீத்து எல்லாத் தலை மகரை, குலைய ஒன்னார், தான் கொன்று,
சிறை நீத்து யூதர், அமுது ஒழுகும் திரு நாடு அமைத்தி, அருள்
                                         செய்தான்.

     எசித்து நாட்டார் நீதியைப் புறக்கணித்து, பகை முதிர்ந்து, குற்றம்
நீங்கி உயர்ந்த யூதர் குலம் முழுவதையும் நெடுங்கால அடிமைச் சிறைக்கு
ஆளாக்கித் தம் சினத்தைக் காட்டினாரென்று கண்டு, கடவுள் சினங்
கொண்டு, அப்பகைவர் மனம் குலையுமாறு, அவர்தம் எல்லாத் தலைச்சன்
ஆண் குழந்தைகளையும் குறையறக் கொன்று, யூதர்தம் அடிமைச்
சிறையை நீக்கி பாலும் தேனுமாகிய அமுதம் பாயும் செல்வ நாட்டில்
அவரை வாழ வைத்துக் கருணை காட்டினான்.

     இந்நிகழ்ச்சி பற்றிய விளக்கம், 14-வது, இளவல் மாட்சிப் படலம்,
38-47 காண்க. செய்து + யூதர், நீத்து + யூதர், என்பன, குற்றிலுகரப்
புணர்க்சியில் யகரம் முன்வர, உகரம் இகரமாய்த் திரிந்து, செய்தியூதர்,
நீத்தியூதர் என நின்றன.
 
                           3
முன்னாட் செய்த வருள்மறவா முறைகொண் டொழுகுந்
                                    தன்மையெனப்
பின்னாட் பெறுந்தந் தலைமகரைப் பிறழா மையினேர்ந்
                                    தவர்மீட்ப
தன்னாட் சிறையைத் தீர்த்தபிரா னவர்க்கே வினபா
                                    லாலெவர்க்கு
மின்னாட் சிறைதீர் தனிமகனை யிவரும் நேர்தற் கேகலுற்றார்.