பக்கம் எண் :

முதற் காண்டம்718

மலர்மேல் நின்ற தேன் துளி என்பதோ? ஒளி தோய்ந்த சங்கின்மேல்
முத்து இருக்கும் அழகு என்பதோ? தேன் தோய்ந்த தாமரை மலருள்
தங்கிய அன்னக் குஞ்சு என்பதோ? சிறப்பு அமைந்த பொன்னின் மேல்
இட்டு வைத்த பவளச் செப்பு என்பதோ?

     அனம் - அன்னம் என்பதன் இடைக்குறை.
 
                        7
வேய்ந்தா னன்னா னெனவானின் விழிபோல் வேய்ந்தா
                          னொளிவேந்த
னாய்ந்தான் கண்டா னீத்தகட லாற்றா வின்பக் கடலினிதிற்
றோய்ந்தான் மலர்த்தாள் கதிர்க்கையாற் றொழுதான்
                          றொழாமற் றவர்க்கண்டு
காய்ந்தா னென்னக் கதிர்ச்சரங்கள் கடுகி வீசிக் கடுத்தனனே.
 
வேய்ந்தான் அன்னான் என, வானின் விழி போல் வேய்ந்தான்
                                    ஒளி வேந்தன்;
ஆய்ந்தான், கண்டான்; நீத்த கடல் ஆறறா இன்பக் கடல்
                                    இனிதின்
தோய்ந்தான், மலர்த் தாள் கதிர்க் கையால் தொழுதான்; தொழா
                                    மற்றவர்க் கண்டு
காய்ந்தான் என்ன, கதிர்ச் சரங்கள் கடுகி வீசிக் கடுத்தனனே.

     அத்திருமகன் அவ்வாறு தோன்றியதனால், ஒளி மன்னனாகிய
கதிரவன் வானத்தின் கண் போல் உதித்துத் தோன்றினான்; ஆராய்ந்து
பார்த்து, யாரென்று கண்டு கொண்டான்; தான் விட்டு எழுந்த கடலும்
ஈடாகாத இன்பக் கடலில் இனிது மூழ்கினான்; திருமகனின் மலர்போன்ற
அடியைத் தன் கதிர்களாகிய கையால் தொழுதான்; அவனைத் தொழாத
மற்றவரைக் கண்டு சினந்தவன் போல், கதிராகிய அம்புகளைக் கடுகப்
பாய்ச்சித் துன்புறுத்தினான்.

     கதிரவனின் இயல்பான காலை இளங்கதிர் திருமகனைக் கையால்
தொழுதலாகவும், பகல் வெங்கதிர் தொழாதாரைக் கடுத்தலாகவும் குறித்த
இது தற்குறிப்பேற்ற அணியாகும்.