பக்கம் எண் :

முதற் காண்டம்724

     வண்டுகள் இரு பக்கமும் நெருங்கி மொய்த்து மகர யாழ் போல்
இசை பாடிக் கொண்டிருக்க, தளிர் இலைளோடு கூடிய பெரிய
பூஞ்சோலையை இடப்பக்கமாக விட்டுத் தாம் வலப் பக்கமாய்ப் போய்,
பின், ஒளி பொருந்திய மணிகளைக் கொண்ட அருவி ஆடையின் மாற்று
வடிவம் போல மலையை வளைத்துக் கொண்டு முழங்கிப் பாய, ஒலித்துக்
கொண்டு விலகிச் சென்ற மயில்கள ஆடும் மலையின் நலத்தைக்
கண்ணுற்றனர்.

     மகரயாழ் - மகரமீன் வடிவாய் அமைந்த யாழ். அருவி முழக்கத்தைக்
கேட்டு விலகி ஒடிய மயில்கள், மண்டும் அதனை மேக முழக்கமாக மயங்கி
ஆடின என்று கொள்க.
 
                       16
கண்டுளி யுளத்தி லோங்கக் களித்தபூங் கொடியோன் சொல்லுந்
தண்டுளி முகில்சூழ் வெற்பைத் தருமறை வடிவாய் நோக்காய்
பண்டுளி யனைத்து மெஞ்சாப் பசிசினந் துயிர்கள் யாவு
முண்டுளி யுயிரைத் தந்த வுயர்மலை வனப்பி தென்றான்.
 
கண்ட உளி, உளத்தில் ஓங்கக் களித்த பூங் கொடியோன் சொல்லும்
தண் துளி முகில் சூழ் வெற்பை, தகு மறை வடிவாய் நோக்காய்
பண்டு உளி, அனைததும், எஞ்சாப் பசி சினந்து உயிர்கள் யாவும்
உண்ட உளி, உயிரைத் தந்த உயர் மலை வனப்பு இது" என்றான்.

     அம் மலையைக் கண்ட போது, தன் உள்ளத்தில் மிகவே களிப்புற்ற,
மலர்க் கொடியைக் கொண்டுள்ளவனாகிய சூசை, மரியாளை நோக்கிச்
சொல்வான்: "சிறப்பு வாய்ந்த வேத வடிவாய் விளங்குபவளே, குளிர்ந்த
மழைத் துளிளைக் கொண்டுள்ள மேகம் தவழும் இம்மலையை நோக்குவாய்:
பண்டை நாளில், இந்நாடு முழுவதையும் குறையாத பசி சினந்து
உயிர்களையெல்லாம் உண்ட போது, உயிரைத் தந்து காத்த உயர்ந்த
அழகிய மலை இது" என்றான்:

     இம் மலையும் பஞ்சமும் மழையும் எலீய முனிவன் காலத்து
நிகழ்ச்சியை நினைவிற்கொண்டு கூறியனவாம், விவரம் : ப, ஏ., I
அரசராகமம், 17 : 1 - 7; 18 : 1 - 2; 41 - 46 காண்க. கண்டவுளி,
உண்டவுளி எனற்பாலன, கண்டுளி, உண்டுளி எனத் தொகுத்தல் விகாரம்
கொண்டன.