பக்கம் எண் :

முதற் காண்டம்726

ஏற்படும் நன்மையாகிய பயனைப் போலப் பகலும் இரவும் அளவில்லாது
பொழிந்தமையால், சித்திரக்கோலின் மூலம் தீட்டிய படமே போல,
உலகமெல்லாம் அழகு பெற்று விளங்கியது" என்றும் சூசை கூறினான்.
 
                      19
ஊனிலைக் குழவி தோன்றி யுலகெலா மளிக்கு மன்பின்
பானிலை யிடமூன் றாற்றாப் பரிசுடை யிவனைக் காட்டக்
கானிலை தோன்றி யக்கார் கடனிலை பயத்த தென்று
மீனிலை முடிதாட் சேர்த்தி மெய்யனைத் தொழுதா டாயே.
 
"ஊன் நிலைக் குழவி தோன்றி, உலகு எலாம் அளிக்கும்
                                           அன்பின்
பால் நிலை இடம் மூன்று ஆற்றாப் பரிசு உடை இவனைக்
                                           காட்ட,
கால் நிலை தோன்றி அக் கார் கடல் நிலை பயத்தது" என்று,
மீன் நிலை முடி தாள் சேர்த்தி, மெய்யனைத் தொழுதாள்
                                           தாயே.

     "ஊனாலாகிய உடலை எடுத்துக் கொண்ட நிலையில் ஒரு
குழந்தையாய்த் தோன்றி, உலகத்தையெல்லாம் மீட்டுக் காக்கும் அன்பின்
தன்மையால், உலகங்கள் மூன்றும் ஈடாக நிற்க இயலாத தன்மை உடைய
இக்குழந்தை நாதனின் உண்மையான இயல்பை உலகத்திற்கு எடுக்கக்
காட்டும் பொருட்டு, அம்மேகம் ஒரு காலின் அளவாகத் தோன்றிப் பின்
கடலின் நிலையைத் தந்து நின்றது" என்று கூறி, தாயாகிய மரியாள்,
விண்மீன்கள் நிலைகொண்ட தன் முடியை அவன் அடிகளில் பதித்து,
மெய்யங்கடவுளாகிய குழந்தை நாதனைத் தொழுதாள்.
 
                    20
சுளகொடு சவரம் வீசுந் தோற்றமே போன்று வேழம்
புளகொடு மதத்திற் சீறிப் புடைத்ததன் செவிகால் வீச
மிளகொடு படர்ந்த மென்னீள் கொடியின்மே லூஞ்ச லாடி
யளகொடு பொலிகூ னார்க்கு மத்திரி யணுகி னாரே.