பக்கம் எண் :

முதற் காண்டம்727

சுளகொடு சவரம் வீசும் தோற்றமே போன்று, வேழம்
புளகொடு மதத்தின் சீறிப் புடைத்த தன் செவி கால் வீச,
மிளகொடு படர்ந்த மெல் நீள் கொடியின்மேல் ஊஞ்சல் ஆடி
அளகொடு பொலி கூன் ஆர்க்கும் அத்திரி அணுகினாரே.

     சுளகு கொண்டு சாமரை வீசும் தோற்றம் போல, மதத்தின் சிலிர்போடு
சீறிப் புடைத்துக் கொண்ட தன் செவியால் யானை காற்று வீசிக் கொண்டு
நிற்க, மிளகுக் காயோடு படர்ந்த மெல்லிய நீண்ட கொடியின்மேல் ஊஞ்சல்
ஆடிய வண்ணம் தன் பெடையோடு பொலிய அமர்ந்திருந்த ஆந்தை
அலறும் அம் மலையை அவர்கள் அணுகினர்.
 
                  21
நாகநீ னெற்றி தூங்கு நன்மணி யோடை போன்று
நாகநீ னெற்றி நாறு நன்மல ரணியாய்ச் சூழந்த
நாகநீ னெற்றி தோன்றி நயன்றரு மறையிற் சிந்தும்
நாகநீ னெற்றி மீன்போ னன்மணி யருவி கண்டார்.
 
நாக நீல் நெற்றி தூங்கு நல் மணி ஓடை போன்று,
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய்ச் சூழ்ந்த
நாக நீல் நெற்றி தோன்றி, நயன் தரு மறையின் சிந்தும்,
நாக நீல் நெற்றி மீன் போல் நல் மணி அருவி கண்டார்.

     யானையின் கரிய நெற்றியில் தொங்கும் நல்ல மணிகள் பதித்த
நெற்றிப் பட்டம் போல, புன்னை மரத்தின் கரும் பச்சை நிறமான இலை
கொண்ட கிளைகளின் உச்சியில் தோன்றும் நல்ல மலர்களை மாலையாகச்
சூடிய அம்மலையின் நீல நிறமான உச்சியில் தோன்றி, எவர்க்கும் நன்மை
தரும் வேதம் போல் பாய்வதும், வானத்தின் நீல நிறமான உச்சியிற் காணும்
விண்மீன்கள் போன்ற, நல்ல மணிகளைத் தன்னுட் கொண்டதுமாகிய
அருவியை அவர்கள் கண்டனர்.

                   22
நிறைதவிர்ந் துணர்ந்த காம நெறியிற்கைப் பொருளே
                                    போன்றும்
முறைதவிர்ந் தடைசீர் போன்றும் முனிகடம் முனிவு
                                    போன்றும்
பொறைதவிர்ந் திழிந்தீண் டோடும் புன்னல
                            மெதிர்கொண்டாங்கத்
துறைதவிர்ந் திடத்திட் டேகித் துளித்ததேன் முல்லை
                                    சேர்ந்தார்