பக்கம் எண் :

முதற் காண்டம்731

     சிவப்பு நிறங் கொண்டு தீட்டப்பட்டது போன்ற அப்புறாக்களின்
சிறகொளியைக் கெடுக்குமாறு, அப்பருந்தும் வட்டமிட்டு இறங்கிப் பாய
வரும் அதே நேரத்தில், வேடனும் தன் அம்பை வில்லில் தொடுத்து
எய்யவே, நீங்கிச் சென்ற அம்பு அப் பருந்தின் உயிரைக் கவர, ஒரு
பாம்பு தன்னை மிதிக்கும் வேடனின் காலைத் தீண்டித் தன் நச்சுப்
பல்லைப் பதிக்கவே அவனும் இறந்தான்.

 
                      27
வினையது விளைவு நோக்காய் வினைபிறர்க் குணர்ந்த பாவந்
தனையது கொல்கூற் றாதல் தகவினா ருரையிற் கேட்டேம்
பினையது வின்று காணப் பெற்றன மென்று சூசை
யனையது விளம்பிப் போன வணிவளர் முல்லை சொல்வாம்.
 
"வினையது விளைவு நோக்காய்; வினை பிறர்க்கு உணர்ந்த பாவம்,
தனை, அது, கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம்;
பினை, அது இன்று காணப் பெற்றனம்" என்று சூசை
அனையது விளம்பி, போன அணி வளர் முல்லை சொல்வாம்.

     "தீ வினையின் விளைவைக் காண்பாய்; பிறர்க்குத் தீ வினை செய்யக்
கருதிய பாவமாகிய அது, கருதிய தன்னையே கொல்லும் கூற்றுவனாய்
அமைதலைப் பெரியோர் சொல்லால் கேட்டு அறிந்துள்ளோம்; பின்,
அதனையே இன்று காட்சிப் பொருளாகக் காணப் பெற்றோம்" என்று
சூசை அதனைப் பற்றி மரியாளுக்குக் கூறி, பின் அவர்கள் சென்ற அழகு
நிறைந்த முல்லை நிலம் பற்றி மேலே தொடர்ந்து சொல்வோம்.

                 முல்லை நில அழகுச் சிறப்பு

     -விளம், -விளம், -மா, கூவிளம்
 
                 28
புதுப்பட வேந்துறீஇப் பொலிதெ ருத்தொறுஞ்
சதுப்பட நகரெலாஞ் சிறந்த தன்மைபோல்
விதுப்பட முகத்துவான் வேந்த னெய்தலான்
மதுப்பட மலர்ந்தன முல்ல வாயெலாம்.