பக்கம் எண் :

முதற் காண்டம்734

ஏர் முகம் புதைத்த வில் இவர் செய்து எய்தலால்,
கார் முகம் புதைத்த வெங் கதிர் உதித்தது என்று,
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்திக் கூய்க் குயில்,
சூர் முகம் புதைத்தன தோகை நாணியே.

     இம்மூவரும் தம் அழகிய முகத்தை மூடி மறைத்த தன்மையாய் ஒளி
வீசி அங்கு வந்து சேரக்கண்டு, கருமேகம் மூடி மறைத்திருந்த ஆதவன்
உதித்ததென்று கருதி, குயில்கள் தம் முகத்தை மூடிய அளவாய் நிறைந்த
இன்பம் அருந்திக் கூவவே, மயில்கள் நாணித் தம் முகத்தைத்
துன்பத்திடையே புதைத்துக் கொண்டன.

     இப்பாடல் மயக்கவணி. இது அடுத்தப் பாடலிலும் தொடர்ந்து,
தற்குறிப்பேற்றவணியாய் நிறைவுபெறுகிறது.
 
               33
பொய்மறுத் திவரெனப் பொலிந்த வோகையா
லைமறுத் திரிமயி லாடி மற்றையு
மைமறுத் தளத்தெழிஇ மகிழ்ந்து பாடவே
கைமறுத் ததிசயித் தலர்ந்த காவெலாம்.
 
பொய் மறுத்து, இவர் எனப் பொலிந்த ஓகையால்,
ஐ மறுத்து, இரி மயில், ஆடி, மற்றையும்
மை மறுத்து உளத்து எழிஇ மகிழ்ந்து பாடவே,
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த கா எலாம்.

     முன் ஆதவனென்று விலகி ஓடிய மயில்கள், பின் இம்மூவர் தோற்றமே
அதுவெனக் கண்ட மகிழ்ச்சியால் அப்பொய்யை மறுத்து, தம் ஐயத்தையும்
அறவே மறுத்து மீண்டும் ஆடவும், மற்று அக்குயில்களும் அது கருமேகம்
என்பதை ஒப்புக்கொள்ளாமல் மறுத்து, ஆதவனின் தோற்றமே எனக்
கொண்டு மனத்தில் எழுச்சிகொண்டு மகிழ்ந்து பாடவும், தம் கைகளாகிய
கிளைகளால் அவ்விரண்டையும் வியந்த தன்மையாய்க் காடுகளெல்லாம்
பூத்துக் குலுங்கின.


                34
புல்லிய பொழிற்கிடைப் புறப்பட் டெய்திய
மெல்லிய தோர்வளி விருந்தெ திர்கொளச்
சொல்லிய தூதுபோற் சுருங்கி வீசியங்
கல்லிய மலர்மணம் வாரிக் கக்குமால்.