பக்கம் எண் :

முதற் காண்டம்735

புல்லிய பொழிற்கு இடைப் புறப்பட்டு எய்திய
மெல்லியது ஓர் வளி, விருந்து எதிர் கொளச்
சொல்லிய தூது போல் சுருங்கி வீசி, அங்கு
அல்லிய மலர் மணம் வாரிக் கக்கும் ஆல்.

     தான் பொருந்தியிருந்த சோலையின் நடுவிலிருந்து புறப்பட்டு வந்த
மெல்லியதொரு காற்று, இம் மூவரையும் விருந்தினராக வரவேற்கச்
சொல்லிவிட்ட தூதுமொழி போல் மெதுவாக வீசி, அங்கு
அகவிதழ்களுக்குள் அடங்கிக் கிடந்த மலர் மணத்தை வாரி இறைக்கும்.

     'ஆல்' அசை நிலை.
 
              35
சூழிசை மேல்வளி துதைந்தங் காடிய
காழிசை தருத்தழை கனியப் பாடலுங்
கேழிசை மூவரை வாழ்த்தக் கின்னர
யாழிசை யின்னரம் புளர லென்பவே.
 
சூழ் இசை மேல் வளி துதைந்து, அங்கு ஆடிய
காழ் இசை தருத் தழை கனியப் பாடலும்
கேழ் இசை மூவரை வாழ்த்தக் கின்னர
யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே.

     இசைக்கும் மேலாகச் சுற்றிலும் காற்று நெருங்கி வீச அதனால் அங்கு
அசைந்தாடிய வைரம் பொருந்திய மரங்களின் இலைகள் கனியப் பாடும்
பாடலும் ஒன்றாகக் கூடி, ஒளி பொருந்திய இம்மூவரையும் வாழ்த்தும்
பொருட்டு வீணை யாழ் என்ற இசைக் கருவிகளின் இனிய நரம்புகளைத்
தடவுதல் ஒப்பாகும் என்பர் இசை உணர்வு உடையோர்.

     'என்ப' என்ற பலர்பால் பயனிலைக்கு, 'இசை உணர்வு உடையோர்'
என்ற எழுவாய் வருவித்து உரைக்கப்பட்டது.
 
               36
ஆயரு முலவுதீங் குழலி னார்ப்பெழ
வாயரு முறவினோ டாவு மானுமொன்
றாயரு மறிவென வமர்ந்து நோக்கலி
னாயரு மறந்தகன் றடிதொ டர்ந்தவே.