பக்கம் எண் :

முதற் காண்டம்737

                 38
தழீஇயின கலன்பொறா தளர்நு சுப்பெனக்
குழீஇயின மலர்பொறாக் கொடிகளூ கல்கொண்
டெழீஇயின கனிபொறா வளையிபங் கள்மேல்
விழீஇயின விணைபொறா விளங்க முல்லையே.
 
தழீஇயின கலன் பொறாத் தளர் நுசுப்பு என,
குழீஇயின மலர் பொறாக் கொடிகள் ஊசல் கொண்டு,
எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல்
விழீஇயின, இணை பொறா விளங்க முல்லையே.

     பிற நிலங்கள் தனக்கு ஒப்பென்பதைப் பொறுத்துக் கொள்ளாமல்
முல்லையே யாவற்றினும் சிறந்து விளங்குமாறு. அணிந்துகொண்ட
அணிகலன்களைத் தாங்க இயலாமல் தளரும் மாதர் இடையைப் போல,
தம்மிடத்துச் செறிந்த மலர்களைத் தாங்க இயலாத கொடிகள் ஊசலாடிக்
கொண்டு, தம்மிடம் தோன்றிய கனிகளைத் தாங்க இயலாமல் வளைந்து
மரக் கொம்புகளின் மேல் விழுந்தன.


               39
காவின்மீ தாடிய கனத்தி னார்ப்பெனப்
பாவின்மீ தாடிய பரிசி னாரவன்
மேவின்மீ தாடிய மிஞிறு விம்மின
பூவின்மீ தாடிய புதுக்கண் ணாடியே.
 
காவின் மீது ஆடிய கனத்தின் ஆர்ப்பு என,
பாவின் மீது ஆடிய பரிசினார் அவண்
மேவில், மீது ஆடிய மிஞிறு, விம்மின,
பூவின் மீது ஆடிய புதுக் கள் நாடியே.

     பாக்களில் கூறப்படும் புகழினும் மேலாக அமைந்த சிறந்த
இயல்புகள் கொண்ட இம்மூவரும் அங்கு வருகையில், மேலே எழுந்து
பறந்த வண்டுகள், பூக்களில் பொருந்தியுள்ள புதுத் தேனை உண்ண
விரும்பி, அச்சோலையின்மீது உலாவிக் கொண்டிருந்த மேகத்தின்
முழக்கமபோல் இரைந்தன.