| 40 |
ஈய்ந்தகண் ணாடிவண் டியாழ்செய் தார்நிழற்
றோய்ந்தகண் ணாடியொண் மயில்தந் தோகைகள்
வாய்ந்தகண் ணாடிகள் வனப்பென் றாயிர
மாய்ந்தகண் ணாடிவந் தவர்க்கண் டாடுமால். |
| |
ஈய்ந்த
கள் நாடி வண்டு யாழ் செய்து, ஆர் நிழல்
தோய்ந்த
கண் நாடி ஒண் மயில், தம் தோகைகள்
வாய்ந்த கண்ணாடிகள் வனப்பு என்று, ஆயிரம்
ஆய்ந்த கண் நாடி, வந்தவர்க் கண்டு, ஆடும் ஆல். |
மலர்கள் தந்த தேனை
நாடி வண்டுகள் யாழ் போல் இரைய, ஒள்ளிய
மயில்கள் நிறைந்த நிழல் படர்ந்த இடத்தை நாடி அங்கு வந்து, தம்
தோகைகளில் அமைந்துள்ள கண் எனப்படும். கண்ணாடிகள் அழகியவை
என்று விரித்துக் காட்டி நின்று, பின் ஆயிரமாய் அழகுடன் அமைந்த தம்
கண்களால் ஆராய்ந்து, வந்த இம் மூவரை இனங் கண்டு கொண்ட
தன்மையாய், அவ் யாழிசைக்கு ஏற்ப ஆடும்.
'ஆல்' அசை நிலை.
வண்டு + யாழ் - வண்டியாழ்; குற்றியலுகரப்
புணர்ச்சி.
| 41 |
பைங்கயிற் றிசைத்தபொற் றாலி பற்றெனக்
கொங்கயற் றிமிசுசூழ் குளிரப் பூத்தன
செங்கயிற் றடியுறை திரண்ட முத்தென
வங்கயற் றிராமர முகைத்த தாமரோ. |
| |
பைங்
கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என,
கொங்கு
அயல் திமிசு சூழ் குளிரப் பூத்தன.
செங் கயிற்று அடி உறை திரண்ட முத்து என,
அங்கு அயல் திரா மரம் முகைத்த தாம் அரோ. |
பச்சைக் கயிற்றில்
பொருத்திய பொன்னாலாகிய தாலி பற்றிப் பிடித்த
தன்மையாய், வாசனையைப் பக்கமெல்லாம் பரப்பும் வேங்கை மரங்கள்
சுற்றுப்புறம் குளிர்ச்சியடையப் பூத்தன; சிவப்புக் கயிற்றின் அடியில் தங்கிய
திரண்ட முத்துப் போல, அங்கு அவற்றின் பக்கத்தே பவள மல்லினை
மரங்கள் தாமும் அரும்பு கூட்டின.
'அரோ'
அசைநிலை. |