பக்கம் எண் :

முதற் காண்டம்74

     முரசின் ஒலியும், சிதறிப் பரந்த சங்கின் ஒலியும், தேரின் ஒலியும், மத
நீரை மழையாகச் சிதறி யானைகள் நடக்கும் ஒலியும், குதிரைகளின் ஒலியும்
ஒன்றோடொன்று மயங்கிப் பேரொலியாகி, கருமேகத்தின் இடியொலியும்
கடலின் ஒலியும் கலங்குமாறு மிகுந்து இரையும்.

     
'ஆல்' அசைநிலை.
  
                 24
பொதிர்படு மணியொலி பொருநர் சாய்தலோ
டெதிர்படு முடியொலி யிரங்கி யாழொலி
கதிர்படுஞ் சிலம்பொலி கழல்கு லாவொலி
யதிர்படும் வெருவற வினிதி லார்ந்தன.
 
பொதிர் படும் மணி ஒலி, பொருநர் சாய்தலோடு
எதிர் படும் முடி ஒலி, இரங்கு யாழ் ஒலி,
கதிர் படும் சிலம்பு ஒலி, கழ குலாவு ஒலி
அதிர் படும் வெரு அற இனிதில் ஆர்த்தன.

     அணிகலன்களிலுள்ள மிகுதியான மணிகள் ஒன்றோடொன்று அசைந்து
படுவதனால் எழும் ஒலி, அரசர் பணிவதற்கு நெருங்கிச் சாய்வதனால்
எதிரெதிராய்ப் படும் முடிகளின் ஒலி, ஒலிக்கின்ற யாழின் ஒலி, ஒளிவீசும்
மாதர் சிலம்புகளின் ஒலி, காலில் வீரர் அணிந்த கழல்கள் அசையும் ஒலி
எல்லாம் அதிர்ச்சி தரும் அச்சம் விளைவிக்காமல் இன்பமாக ஒலித்தன.

     இரங்கு + யாழ் - இரங்கியாழ்; புணர்ச்சியில் முற்றியலுகரம்
இகரமாயிற்று.
   
                  25
நெரிந்தன குடைகொடி நிசியைச் செய்யவாங்
கெரிந்தன கலனொடு மிரும்பொன் மாமுடி
திரிந்தன வயின் றொறுந் தெளிந்த நண்பகல்
புரிந்தன புரியெலாம் பொருவில் வாழவே.
 
நெரிந்தன குடை கொடி நிசியைச் செய்ய, ஆங்கு
எரிந்தன கலனொடும் இரும் பொன் மாமுடி
திரிந்தன வயின் தொறும் தெளிந்த நண்பகல் புரிந்தன,
புரி எலாம் பொருவு இல் வாழவே.