பக்கம் எண் :

முதற் காண்டம்740

     -மா, கூவிளம், -விளம், -விளம், -மா

                   44
வீங்கு தங்குல மெலிவுறா தாங்குயர் நீரா
ரோங்கு தங்குணத் தொத்தசூழ் நிலத்திறாழ் விழுதே
தாங்கு தொன்மரத் தடிமண றிண்ணையிற் றங்கி
யாங்கு வெங்கதிர் சாய்ந்தபின் னின்றுசெல் வயர்ந்தார்.
 
வீங்கு தம் குலம் மெலிவு உறா தாங்கு உயர் நீரார்
ஓங்கு தம் குணத்து ஒத்த, சூழ் நிலத்தில் தாழ் விழுதே
தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி,
ஆங்கு வெங்கதிர் சாய்ந்த பின், நின்று செல்வு அயர்ந்தார்.

     பெருமை கொண்ட தம் குலம் மெலிவுறா வண்ணம் தாங்கும்
உயர்குண முடையோரின் உயர்ந்த குணத்திற்கு ஒத்த வண்ணமாய்,
சுற்றிலுமுள்ள நிலப்பரப்பில் தாழப் பாய்ந்த விழுதுகள் தாங்கி நிற்கும்
ஆலமரத்து அடியில் அமைந்த மணல் மேட்டில் அம்மூவரும் தங்கியிருந்து,
கதிரவன் மறைந்தபின், அங்கிருந்து பயணம் மேற்கொண்டார்.

     விழுதுகளால் தாங்கி நெடுங்காலம் நிலைபெறுதல் பற்றி, 'தொன்மரம்'
என்பது ஆலமரத்திற்குக் காரணங் கருதி அமைந்த பெயர்.
 
                  45
விண்வி ளக்கொளி வேந்தனைப் பொற்புறத் தெளித்துக்
கண்வி ளக்கிய கவின்மணி மேனியைப் பூண்டு
மண்வி ளக்கிட வந்தநா தனைப்புகழ்ந் தும்பர்
பண்ணி ளக்கிசை பாடிப்போய் மருதமே சேர்ந்தார்.
 
விண் விளக்கு ஒளி வேந்தனைப் பொற்பு உறத் தெளித்து,
கண் விளக்கிய கவின் மணி மேனியைப் பூண்டு,
மண் விளக்கிட வந்த நாதனைப் புகழ்ந்து உம்பர்,
பண் விளக்கு இசை பாடி, போய் மருதமே சேர்ந்தார்.

     வானத்திற்கு விளக்காகும் ஒளி மன்னனாகிய ஆதவனின் கதிர்களை
மேலும் அழகுபடுத்தித் தெளித்து, கண்ணை விளங்கச் செய்த அழகிய
மாணிக்கம் போன்ற உடலை அணிந்து கொண்டு, இம்மண்ணுலகத்தைப்