பக்கம் எண் :

முதற் காண்டம்744

இங்கண் பா யாப்பு இசை பயன் விரித்து உரைத்து என்ன,
அம் கண் மாதர் கட்டு அவிழ்த்துச் செந் நெல் முடி நடுவார்
திங்கள் நாண் முகத்து இவர்க்கு இணை அல எனச் சினந்தே,
அங்கண் ஆம்பலோடு அலர் எலாம் களை எனப் பறிப்பார்.

     பாடலின் கட்டுக்குள் அமைந்து கிடந்த பொருளை விரித்துரைப்பது
போல, இங்கு ஓர் இடத்தில் அழகிய கண்ணுள்ள மகளிர் சிலர் செந் நெல்
நாற்று முடிகளைக் கட்டவிழ்த்து நடுவர். வேறு சில மகளிர், மதியும் நாணத்
தக்க இம்மகளிர்க்கு இணையல்ல என்று சினந்த தன்மையாய், அங்கு ஓர்
இடத்தில் ஆம்பலோடு பிற மலர்கள் கொண்ட சடிகளையெல்லாம்
களையென்று பறித் தெடுப்பர்.

     பாவியாப்பு - பா + யாப்பு : உயிர் முன் யகரம் வர, இடையே இகரம்
பெற்று, வகர உடம்படு மெய்யோடு கூடி இவ்வாறு நின்றது, 'அலர்' அலர்ச்
செடிகளுக்கு ஆகு பெயர்.
 
                   52
படியொ ருங்கிவர் பயத்தநன் றியல்பென வொருபால்
நெடிதொ ருங்குசெந் நெல்வளர்ந் திவர்த்தொழு தொருபால்
கடிதொ ருங்குகை கூப்பெனக் கதிர்நெறித் தொருபா
லடியொ ருங்குற வளைதலை விளைந்தன வகணி.
 
படி ஒருங்கு இவர் பயத்த நன்று இயல்பு என, ஒரு பால்
நெடிது ஒருங்கு செந் நெல் வளர்ந்து, இவர்த் தொழுது, ஒரு பால்
கடிது ஒருங்கு கை கூப்பு எனக் கதிர் நெறித்து, ஒரு பால்
அடி ஒருங்கு உற வளை தலை விளைந்தன, அகணி.

     இம்மூவரும் உலகமெங்கும் செய்த நன்மையின் இயல்பைக் காட்டுவன
போல், ஒரு பக்கத்து வயல்கள் ஒன்றாகச் செந்நெற் பயிர்கள் நெடிது
வளர்ந்து கிடந்தன. மற்றொரு பக்கத்து வயல்கள் விரைவாக இவரைத்
தொழுது ஒருங்கு கை கூப்பிய தன்மையாய்க் கதிர்கள் நிமிர நின்றன.
இன்னொரு பக்கத்து வயல்கள் இவர் தம் அடிகளில் ஒருங்கு விழுந்து
வணங்கிய தன்மையாய் வளைந்த தலையோடு விளைந்து கிடந்தன.