பக்கம் எண் :

முதற் காண்டம்745

                  53
மீனி ருங்கொடி வேந்துதன் னருள்வளங் காட்டத்
தேனி ருந்தலைக் கரும்புற ழாடிய செந்நெல்
வானி ரும்புலத் தரிவைதா ளணியிள மதிபோற்
கூனி ரும்பினிற் குறைத்தரி பகுத்தன ரொருபால்.
 
மீன் இருங் கொடி வேந்து தன் அருள் வளம் கட்ட
தேன் இருந் தலைக் கரும்பு உறழ் ஆடிய செந் நெல்
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல்
கூன் இரும்பினில் குறைத்து, அரி பகுத்தனர் ஒரு பால்.

     விண்மீன்களைப் பெருமை வாய்ந்த கொடியாகக் கொண்டுள்ள
அரசனாகிய குழந்தை நாதனின் அருள் வளத்தைக் காட்டிய தன்மையாய்,
சாறாகிய தேனைத் தன்னுள் கொண்டு விரிந்த தலையுடன் விளங்கும்
கரும்பு போல் வளர்ந்து ஆடிக் கொண்டிருந்த செந்நெற் பயிரை,
பானுலகிற்குரிய பேரறிவு படைத்த மங்கை மரியாள் தன் அடியில்
அணிந்துள்ள இளம்பிறை போல் வளைந்த அரிவாளால் அறுத்து, ஒரு
பக்கம் சிலர் அரி அரியாகப் பகுத்து இட்டனர்.

     'இரும்பு' இரும்பினால் செய்த அரிவாளுக்கு ஆகுபெயர்.
 
                   51
குறைக்கு வார்சிலர் கூமகட் குழலெனச் சேர்த்தி
யிறுக்கு வார்சில ரிவள்புணர் முலையெனப் பலபேர்
றிறைக்கு வார்சிலர் நீனிறப் பகட்டினா றெளிப்ப
வுறுக்கு வார்சில ருறைந்தவை நீக்குவார் சிலரே.
 
குறைக்குவார் சிலர்; கூ மகள் குழல் எனச் சேர்த்தி
இறுக்குவார் சிலர்; இவள் புணர் முலை எனப் பல போர்
நிறைக்குவார் சிலர்; நீல் நிறப் பகட்டினால் தெளிப்ப
உறுக்குவார் சிலர்; உறைந்த வை நீக்குவார் சிலரே.

     சிலர் நெற்பயிரை அறுத்து அரிகளாகப் போடுவர்; சிலர் அரிகளை
நிலமகளின் கூந்தல் போல் கூட்டிச் சேர்த்துக் கட்டுகளாக இறுக்கிக்
கட்டுவர்; சிலர் அவ்வரிக் கட்டுகளை இந்நில மகள் கொண்டுள்ள முலை
போல் பல அரிக்கட்டுப் போர்களாக நிறைத்துக் குவிப்பர்; சிலர் அவ்வரிக்
கட்டுப் போரை விரித்துப் போட்டுக் கரு நிறமான எருமைக் கடாக்களை
மிதிக்க விட்டு முடுக்குவர்; சிலர் நெல்லோடு கூடிக் கிடிந்த வைக்கோலைப்
பிரித்தெடுப்பர்.