|
அகிற் கட்டையை
எரிக்கும் புகையும் மணம் பொருந்திய பிற
மெல்லிய புகைகளும் ஒன்றாய்த் திரண்டு பகலவனை மறைத்து இருளைக்
கொடுக்கும் தெருவில், மேகங்கள் மோதும் மலையில் ஆணும்
பெண்ணுமாகிய துணை மயில்கள் திரிந்தது போல் சூசையும் மரியாளுமாகிய
இருவருமே நடந்து சென்றனர்; துணியால் பொதிந்து ஏந்தும் குழந்தை நாதன்
அம் மேகத்துள் தோன்றிய மதிபோல் தோன்ற, ஒப்புமை அற்ற இன்பத்தால்
எவரும் மனம் குளிருமாறு, மெல்லிய கதிரொளியைப் பரப்பிய வண்ணம்
போயினர்.
வாச(ம்) + பூ
+ புகை - 'வாசப் பூம் புகை' என வரத் தக்கது,
வடமொழப் புணர்ச்சியில் 'வாச பூம் புகை' என வல்லினம் மிகாது
இயல்பாயிற்று.
| 64 |
தேனலம் பயின்று நறா மழை துளித்துச் சீர்கெழு தூங்கிசை
திருத்திப்
பானலம் பயின்று பாடிய வண்டின் பல்லின மூசலா டுதற்கே
கானலம் பயின்ற மலர்கடோ ரணத்திற் கதிர்மணித் தோரணந்
தயங்க
வானலம் பயின்ற வேந்துவந் தமையால் வானவில் வீழ்ந்தெனப்
போன்றே. |
| |
தேன் நலம் பயின்று,
நறா மழை துளித்து, சீர் கெழு தூங்கு இசை
திருத்தி
பால் நலம் பயின்று பாடிய வண்டின் பல் இளம் ஊசல் ஆடுதற்கே
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணித் தோரணம்
தயங்க,
வான் நலம் பயின்ற வேந்து வந்தமையால், வான வில் வீழ்ந்து எனப்
போன்றே. |
பொழியும் தேனின்
நலம் சிறந்து, மணத்தை மழையாகப் பொழிந்து,
சிறப்பு மிக்க மெல்லிசையை மேலும் திருத்திப் பாலின் இனிமை நலம்
பொருந்தப் பாடிய பல இன வண்டுகள் ஊஞ்சல் ஆடுவதற்கென்றே
அமைத்த மண நலம் சிறந்த மலர்களாலாகிய தோரணத்தைக் காட்டிலும்
ஒளி பொருந்திய மாணிக்கத்தால் அமைந்த தோரணம் சிறந்து விளங்க,
வானுலக நன்மைகளையெல்லாம் தன்னிடத்து நிறைவாகக் கொண்டுள்ள
மன்னனாகிய ஆண்டவனே அங்கு வந்தமையால், வான வில்லும் அங்கு
வந்து வீழ்ந்து கிடந்தது என்பது போலத் தோன்றும்.
'தோன்றும்'
என்ற சொல் வருவித்து முடிக்கப்பட்டது. |