பக்கம் எண் :

முதற் காண்டம்758

மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி, விழுத் தக நிரை
                         நிரை தீட்டி,
பால் நிலா எறிக்கும் பளிங்கு உயர் கோயில் பற் பல சாளர
                         விழிகள்
வான் நிலா எரிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின்,
                        "வம்மின் !" என்று அழைப்ப,
தூ நிலா எறிக்கும் மணிக் கதவு அகற்றி, சுருதி வாய்
                         திறந்து, இவர், புக்கார்.

     மேலே ஒளியை வீசும் பல நிற மணிகளைப் பதித்து, சிறந்த விதமாகச்
சித்திரங்களை வரிசை வரிசையாகத் தீட்டி, பால் போன்ற ஒளியை வீசும்
பளிங்கினால் அமைந்த உயரமான கோவிலுள்ள பற்பல சன்னல்களாகிய
கண்கள், வானிலுள்ள நிலாவின் ஒளியை வீசும் குழந்தை நாதனைக்
காணுமாறு திறந்த பின், "வாருங்கள்!" என்று அழைக்கவே, இவர்கள், தூய
ஒளியை வீசும் மாணிக்கக் கதவைக் கடந்து, வேதம் பொருந்திய தம்
வாயைத் திறந்து துதித்த வண்ணம் உள்ளே புகுந்தனர்.

     கதவு திறந்து, சன்னல்கள் திறக்கப்படு முன்னரே இவர்கள் சென்று
சேர்ந்தனர் என்பது கருத்து. சாளரங்களை விழிகளாக உருவகித்து, அவை
மகவினை நோக்க மலர்ந்ததாகவும், வம்மினென்று அழைத்ததாகவும்
குறிப்பிட்டது தற்குறிப் பேற்றவணி.

                     சீமையோன் வருகை

     -விளம், -மா, தேமா, -விளம், -மா, தேமா
 
                     72
தேக்கிய புகையும் வாமத் தெருட்சியு மருளி னோக்கிற்
காக்கிய விருந்தின் விம்ம வணிமணிக் கோயிற் புக்கு
வீக்கிய துவங்கட் கொன்றா மெய்யனை வினையின் றீமை
போக்கிய பலியென்றாகப் போற்றிவைத் திருவர் நின்றார்.
 
தேக்கிய புகையும் வாமத் தெருட்சியும் மருளின் நோக்கிற்கு
ஆக்கிய விருந்தின் விம்ம, அணி மணிக் கோயில் புக்கு,
வீக்கிய துவங்கட்கு ஒன்று ஆம் மெய்யனை, வினையின் தீமை
போக்கிய பலி என்று ஆகப் போற்றி வைத்து, இருவர், நின்றார்.