பக்கம் எண் :

முதற் காண்டம்773

தேன் தும்மு மாலை சேர்த்தித் திரு அடி பணிந்து, நம்மால்
ஊன் தும்மு வேல்வாய் பின்நாள் உறுந் துயர் உணர்ந்து
                                     நொந்து,
வான் தும்மு மின்னின் மின்னு மகவினை நெடிது வாழ்த்தி,
கான் தும்மு முகப் பூந் தேன் உண் கண் கனிந்து, இமைத்தல்
                                     செய்தாள்.

     தேனைப் பொழியும் மாலை சூட்டித் திருவடிகளை வணங்கி, நம்
பாவத்தின் காரணமாகப் பின் நாளில் ஊனைக் கொண்ட வேல் முனையில்
அடையவிருக்கும் துயரத்தை உணர்ந்து நொந்து, வானத்தில் வெளிப்படும்
மின்னலைப்போல் ஒளிரும் திருமகனை நெடுநேரம் வாழ்த்தி, மணம்
வெளிப்படும் அம்முகமாகிய பூவின் தேனைப் பருகும் கண்கள் கனிந்து,
இமை கொட்டாது நின்றாள்.

     'ஊன் தும்மு வேல்' என்றது, முன் விறர் உடலில் செலுத்தி, அவர்
ஊனும் உதிரமும் கறையாய்ப் படிந்த வேல் என்று கொள்க.
 
                     98
ஏற்றினா ளிளவற் றாளை யிணையறுங் கன்னித் தாயைப்
போற்றினா ளிருவர் மாட்சிபுடையிலவந் தெவருங் கேட்பச்
சாற்றினா ளின்புட் பொங்கித் தாரைநீர் தாரை யாகத்
தூற்றினாள் பெருக்குற் றின்பத் தூய்கட லமிழ்ந்தி னாளே.
 
ஏற்றினாள் இளவல் தாளை; இணை அறும் கன்னித் தாயைப்
போற்றினாள்; இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்பச்
சாற்றினாள்; இன்பு உட் பொங்கித் தாரை நீர் தாரையாகத்
தூற்றினாள்; பெருக்கு உற்ற இன்பத் தூய் கடல் அமிழ்ந்தினாளே.

     குழந்தை நாதனின் திருவடிகளைத் தன் தலை மீது ஏற்றிக்
கொண்டாள்; ஒப்பற்ற கன்னித் தாயைப் போற்றினாள்; பக்கத்தில் அணுகி
வந்து எல்லோரும் கேட்குமாறு அவ்விருவரின் மாட்சியை எடுத்துக்
கூறினாள்; தன் உள்ளத்தில் இன்பம் பொங்கிக் கண்ணீர்த் தாரையை
மழைத் தாரை போலத் தூற்றினாள்; அதனால் பெருக் கெடுத்த
இன்பமென்னும் தூய கடலில் மூழ்கினாள்.

     உற்ற + இன்பம் - 'உற்றவின்பம்' என வர வேண்டியது, 'உற்றின்பம்'
எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.