பக்கம் எண் :

முதற் காண்டம்78

              31
நீன்மணி மரகத நித்தி லந்துகிர்
வேன்மணி வயிரங்கோ மேத கம்மிளிர்
பான்மணி பரும்வயி டூரி யம்படர்
வான்மணி மாணிக்கம் வைக்கும் மாடமும்.
 
நீல் மணி, மரகதம், நித்திலம், துகிர்,
வேல் மணி வயிரம், கோமேதகம், மிளிர்
பால் மணி, பரும் வயிடூரியம், படர்
வான் மணி மாணிக்கம் வைக்கும் மாடமும்.

     நீல மணியும், மரகதமும், முத்தும், பவளமும், வேல் போன்ற
மணியாகிய வைரமும், கோமேதகமும், பால் போல் ஒளிரும் மணியாகிய
புட்பராகமும், பருத்த வைடூரியமும், மணி என்னும் பெயருக்கே உரிய
ஒளிபடரும் சிறந்த மாணிக்கமும் ஆகிய நவமணிகளை இட்டு வைக்கும்
அறைவீடும் உள்ளது.

      நீல் - 'நீலம்' என்பதன் கடைக்குறை.
  
                    32
ஒன்னல ரிறைகொணர்ந் துற்ற வம்பொனுந்
துன்னலர் மலைவயிற் றுதைந்த பைம்பொனு
மின்னலர் புனல்கொணர் மிடைந்த செம்பொனு
மின்னலர் நிதியெலா மிருக்கு மாடமும்.
 
ஒன்னலர் இறை கொணர்ந்து உற்ற அம் பொனும்,
துன்அலர் மலைவயின் துதைந்த பைம் பொனும்,
மின்அலர் புனல் கொணர் மிடைந்த செம்பொனும்,
இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும்.

     பகைவர் கப்பமாகக் கொணர்ந்து பெற்ற அழகிய பொன்னும், மலர்
நிறைந்த மலையில் புதைந்து கிடந்து எடுத்த பசும் பொன்னும், ஒளி படரும்
ஆறு கொணர்ந்து கரையில் செறிந்து கிடந்த செம்பொன்னுமாக, இனிமை
படரும் பொன்னெல்லாம் இட்டு வைத்திருக்கும் அறைவீடும் உள்ளது.

                  33
அவ்விய மொழித்தரு ளளிக்கு மாமறைத்
திவ்விய மதுரநூல் செப்புஞ் சாலையு
நவ்விய வுணர்வுறீஇ யெலையு நாடியுள்
வவ்விய பலகலை வகுக்குஞ் சாலையும்