பக்கம் எண் :

முதற் காண்டம்80

     மணமுள்ள நல்ல கனியைக்காட்டிலும் இனிமையான யாழோடு
தேனினும் நல்ல பல இசைக் கருவிகள் முழங்கும் சாலைகளும் உள்ளன.
பாலின் நலத்தையும் வென்று ஒழித்த பாக்களைப் பாடியும் நடனம் ஆடியும்
விண்ணுலகிலுள்ள இன்பம் போல ஒலி பெருகும் சாலைகளும் உள்ளன.

     நல - 'நல்ல' என்ற சொல்லின் இடைக்குறை.
  
               36
மாற்றர சினமிறை வணங்குஞ் சாலையும்
வேற்றர சினந்திறை விசிக்குஞ் சாலையும்
மேற்றர சினமினி திருக்குஞ் சாலையும்
போற்றர சினத்துமாண் பொருத்துஞ் சாலையும்
 
மாற்றுஅரசு இனம்இறை வணங்குஞ் சாலையும்
வேற்று அரசு இனம் திறை விசிக்கும் சாலையும்,
ஏற்ற அரசு இனம் இனிது இருக்கும் சாலையும்,
போற்று அரசு இனத்து மாண் பொருத்தும் சாலையும்.

     முன் பணியாது பகைத்திருந்த அரசர் கூட்டம் வந்து அரசனை
வணங்கும் கூடமும், முன் பணிந்த வேற்றரசர் கூட்டம் வந்து கப்பங்
கட்டும் கூடமும், தலைமையை ஏற்று நட்புறவு கொண்ட அரசர் கூட்டம்
வந்து இனிதாக உறவாடி இருக்கும் கூடமும், போற்றிய அரசர்
கூட்டத்திற்குப் பரிசுகளால் மாண்பு பொருத்தும் கூடமும் உள்ளன.

     ஏற்றரசு - ஏற்ற + அரசு - 'ஏற்றவரசு' என வரவேண்டியது,
'ஏற்றரசு' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.
 
                 37
ஆமுறை முகிலென வளிக்கும் வான்பொருள்
மீமுறை திருந்திட விரும்பி யாவருந்
தாமுறை யிடமெலாந் தருமச் சாலையா
யேமுறை சிறந்ததோர் சாலை யில்லையே.
 
ஆம் உறை முகில் என, அளிக்கும் வான் பொருள்
மீ முறை திருந்திட விரும்பி, யாவரும்,
தாம் உறை இடம் எலாம் தருமச் சாலை ஆய்,
ஏம் முறை சிறந்தது ஓர் சாலை இல்லையே.