பக்கம் எண் :

முதற் காண்டம்81

     மழையாய்ப் பொழியும் மேகம் போல் தருமத்தை மேலான முறையில்
திருந்தச் செய்ய விரும்பி, அந்நகர மக்கள் யாவரும் இரவலர்க்கும்
கொடுக்கும் மிகுதியான பொருளினால், தாம் வாழும் இடமெல்லாம் தருமச்
சாலையாய் அமையவே, இரவலர்க்குப் புகலிடம் என்று சிறப்பு முறையில்
அமைந்த தருமச்சாலை என்று ஒன்றும் அங்கு இல்லை.

     ஏம் - 'ஏமம்' என்ற சொல்லின் இடைக்குறை.
 
                 38
பணிச்சுவர்ச் சாலையும் பவளப் பந்திக்கால்
தணிச்சுவர்ச் சாலையுந் தரளக் கொத்துடை
மணிச்சுவர்ச் சாலையும் வளைத்த தேவமா
வணிச்சுவர்க் கோயிலை யறைய லாமரோ.
 
பணிச் சுவர்ச் சாலையும், பவளப் பந்திக் கால்
தணிச் சுவர்ச் சாலையும், தரளக் கொத்து உடை
மணிச் சுவர்ச் சாலையும் வளைத்த தேவ மா
அணிச் சுவர்க் கோயிலை அறையலாம் அரோ.

     அணிகலன்கள் தொங்கவிட்ட புறமதிற் சுவரைக் கொண்ட வீதியும்,
வரிசையாகப் பவளத் தூண்கள் நிறுத்திய பருமையான இடைமதிற் சுவரைக்
கொண்ட வீதியும், முத்துக் குஞ்சங்கள் தொங்கவிட்டு மணிகள் பதித்த
உள்மதிற் சுவரைக் கொண்ட வீதியும் வளைத்துக் கொண்டிருக்கும் அழகிய
சுவர்களாலான கடவுளுக்கு உரிய பெரிய கோவிலைப் பற்றி இனிமேல்
சொல்லத் தொடங்குவோம்.

     'அரோ' அசைநிலை. இடையே வீதிகள் விட்டு மூன்று வரிசையாய்
அமைந்த மதில்களால் சூழப்பட்ட அழகிய சுவர்களாற் கட்டி எழுப்பிய
எருசலேம் ஆலயம் இருந்ததென்பது கருத்து.