பக்கம் எண் :

முதற் காண்டம்84

      அழகிய பொன் தகட்டின் மேல் எழுத்துக்களைச் செம் பொன்னால்
அரிய முறையில் பொறித்த அழகு போல், தெளிந்த ஒளியுள்ள அழகிய
பொன்னால் செய்து மணிகள் பொருத்திய சுவர்களின் மேலே எழுப்பி,
அரிய தொழில் திறம் படைத்த தச்சரும் தோற்று நாணும்படி பசும்
பொன்னால் செய்த கோபுர உச்சி வானத்தோடு ஒட்டப்பட்டது போல்
தோன்றியது. அக் காட்சி சிறந்த பொன்னால் வனைந்த தொழில் திறத்தை வானவர் பாராட்டி இவ்வுலகிற்குக் கை சுட்டிக் காட்டினர் என்பது போல்
இருந்தது.

      போன்றே - 'போன்றது' என்ற சொல்லின் ஈறு கெட்டது.
   
                       42
வையகத் துள்ளோ ரேறவும் விரும்பி வானவ ரிழியவும்
                             வழியென்
றையகத் தொளிர்வான் பாய்ந்தவா லயமே யந்தரத்
                             துயர்தலை சாய்ந்து
கையகத் ததனைக் கடவுடான் றாங்கக் களித்தியாக்
                             கோபென்பாற் கங்கண்
டுய்யகத் தெழிலோ ரிழிந் தெழுந் துலவத் தோன்றிய
                             வேணியைப் போன்றே.
 
வையகத்து உள்ளோர் ஏறவும், விரும்பி வானவர் இழியவும்
                         வழி என்று,
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே, அந்தரத்து உயர்
                         தலை சாய்ந்து,
கை அகத்து அதனைக் கடவுள் தான் தாங்க, களித்து
                         யாக்கோபு என்பாற்கு, அங்கண்
துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவத் தோன்றிய
                         ஏணியைப் போன்றே.

      பூமியிலுள்ளோர் ஏறி மேலே செல்லவும், வானவர் விரும்பி இறங்கிக்
கீழே வரவும் வழியாகி அழகிய இடப்பரப்போடு ஒளிரும் வானத்தை எட்டப்
பாய்ந்து நின்ற ஆலயத்தின் தோற்றம், கடவுள் அந்தரத்தில் ஓர் உயர்ந்த
இடத்தில் அமர்ந்து, தம் கைக்குள் அதனைத் தாங்கிப் பிடித்து, அங்கிருந்து
தூய மனம் படைத்த அழகு வடிவமுள்ள வானவர் இறங்கியும் ஏறியும்
உலவுவதாகக் கண்டுகளிக்குமாறு யாக்கோபு என்பவனுக்குத் தோன்றிய
ஏணியைப் போன்று இருந்தது.