பிற
தெய்வங்களுக்கும் பொது என்ற தன்மை நீங்கத் தனிச் செங்கோல்
செலுத்தி வருகின்ற, உலகமெல்லாம் வணங்கத் தக்க மெய்யங் கடவுளையே
வணங்குவதனாலும், அளவெல்லாம் கடந்து பழுதற்ற பயனைத் தரக்கூடிய
அறநெறிப்படி ஒழுகுகின்ற அருமையாலும், ஒப்புமை நீங்கிய எல்லா
நன்மைகளும் தாங்கிய குடிகள் விருப்பத்தோடு தங்கியிருக்கின்ற
தன்மையாலும், எருசலேம் என்னும் பெரிய நகரம் இந்நிலவுகில் விளங்கும்
எல்லா நகரங்களையும் பழித்து மேலோங்கி நிற்கும்.
வதிந்தன -
'வதிந்த' என்ற பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை
பெற்று நின்றது.
பொழுது
போக்கு
- விளம், கருவிளம், கருவிளம், புளிமா
51
|
இன்னரு
நகரமை யெரிமணி யிழையி
னுன்னரு மெழினல முடைவனக் கவினார்
பன்னரு மறநெறி பழுதற வினிதாய்த்
துன்னரு நயனொடு தொலைவன பொழுதே. |
|
இன்ன அரு நகர்
அமை எரி மணி இழையின்
உன்ன அரும் எழில் நலம் உடைவனக் கவினார்,
பன்ன அரும் அற நெறி பழுது அற இனிதாய்த்
துன்ன, அரு நயனொடு தொலைவன பொழுதே. |
இத்தகைய
அரிய நகரத்தில் அமைந்துள்ள, ஒளி பொருந்திய மணி
பதித்த அணிகலன் போல் நினைத்தற்கு அரிய புற அழகும் அக அழகும்
ஒருங்கே கொண்ட மக்களெல்லாம், சொல்வதற்கு அரிய அற நெறியில்
குற்றமற இனிதாய் ஈடுபடுவதனால், அரிய நன்மையோட பொழுதுகள்
கழியும்.
'கவின்'
எனப் பின்னும் வரவே, முன் 'எழில்' என்றது புறவழகு
எனக் கொள்க. பொழுது பகல் இரவு எனவும், அவற்றுள்ளும் வைகறை
முதல் ஆறு சிறு பொழுதாகவும் கொள்ளப்படுதலின், 'தொலைவன'
எனப் பன்மையாற் கூறப்பட்டது.
இன்ன + அரு
- 'இன்னவரு' என வரவேண்டியது, தொகுத்தல்
விகாரமாய் 'இன்னரு' என நின்றது. உன்னரு, பன்னரு, துன்னரு,
என்பனவும் இதுபோல் வந்த விகாரமென அறிக.
|