பக்கம் எண் :

முதற் காண்டம்92

               52
ஆடுவ ரமுதினோ டலர்மது விகலப்
பாடுவர் பொருணகு பயனமை கலைநூ
னாடுவர் நளிருற நறவுறு மலரைச்
சூடுவர் நயனொடு தொலைவன பொழுதே.
 
ஆடுவர்; அமுதினோடு அலர் மது இகலப்
பாடுவர்; பொருள் நகு பயன் அமை கலை நூல்
நாடுவர்; நளிர் உற நறவு உறு மலரைச்
சூடுவர்; நயனொடு தொலைவன பொழுதே.

     சிலர் ஆடுவர்; சிலர் அமுதத்தோடு மலரிற் பிறந்த தேனுக்கும்
ஒப்பாகப் பாடுவர்; சிலர் பொருட்பயனும் நகைச்சுவைப் பயனும் அமைந்த
கலை நூல்களை நாடிக் கற்பர்; சிலர் குளிர்ச்சி பொருந்த, தேன் கொண்ட
மலரைச் சூடுவர்; இவ்வாறு இன்பமாகப் பொழுதுகள் போகும்.

     'ஆடுதல்' என்றது விளையாடுதலும் கூத்தாடுதலும் போன்ற
எல்லாவகை ஆடலுக்கும் பொருந்தும்.
 
                 53
மருக்கொடு மிளிரலர் மருவிய முடிசூழ்ந்
துருக்கொடு மிளிருவ ரெரியொடு மணநீர்
திருக்கொடு மிளிரின தெருவிடை யெறியப்
பெருக்கொடு மிளிர்நகர் பெயர்வன பொழுதே.
 
மருக் கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து
உருக் கொடு மிளிருவர், எரியொடு, மண நீர்
திருக் கொடு மிளிரின தெரு இடை எறிய,
பெருக் கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே.

     வாசனை கொண்டு விளங்கும் மலர்களாகிய முடிகளை அணிந்து
அழகிய வடிவத்தோடு விளங்கும் சிலர், செல்வ வளங் கொண்டு விளங்கின
தெருவில் மங்கல விளக்குகளை ஏந்திக்கொண்டு, மணமுள்ள பன்னீரைத்
தெளித்துக் கொண்டு செல்வர். இவ்வாறு அப்பன்னீர்ப் பெருக்கோடு
விளங்கும் அந்நகரில் பொழுதுகள் கழியும்.

     'எரி' ஆகு பெயராக விளக்கைக் குறித்தது. மங்கல விளக்கு குறிக்கப்
பெற்றமையால், 'மிளிருவர்' மகளிர் என்பதும், 'பொழுது' இரவு என்பதும்
கொள்க.