பக்கம் எண் :

முதற் காண்டம்93

                 54
இந்திணை யிதழவி ழிளமது மலராற்
பந்தினை வனைகுவர் படிகுவ ரெறிவார்
வந்தினை யெதிர்குவர் மறைகுவர் நகுவார்
சிந்தனை நயனொடு செலுமொரு பொழுதே.
 
இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால்
பந்தினை வனைகுவர்; படிகுவர்; எறிவார்;
வந்து இணை எதிர்குவர்; மறைகுவர்; நகுவார்;
சிந்தனை நயனொடு செலும் ஒரு பொழுதே.

     சில மகளிர் இதழ் விரியும் தேனுள்ள இள மலர்களால் சந்திரனைப்
போன்ற பந்துகள் செய்வர்; எறிய வசதியாகப் பதுங்குவர்; பிறர் மேல்
எறிவர்; இணையாக வந்து எதிர்கொள்வர்; மறைவர்; வெற்றியின்போது
மகிழ்வர்; இவ்வாறு சிந்தனைக்கு இன்பம் தந்து ஒரு பொழுது கழிந்து
செல்லும்.
 
                55
மீன்மலை மெலிதர மிளிரற வினையோர்
பான்மலை மெலிதர விசையொடு பகல்போய்
நூன்மலை மெலிதர நுணியுணர் விரவாய்
வான்மலை மெலிதர வருமிரு பொழுதே.
 
மீன் மலை மெலிதர மிளிர் அற வினையோர்,
பால் மலை மெலிதர இசையொடு பகல் போய்
நூல் மலை மெலிதர நுணி உணர்வு இரவு ஆய்
வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே.

     விண்மீன்களும் ஒப்புமையில் மெலியுமாறு விளங்கும் அறச்
செயலாளர், பாலும் ஒப்புமையில் மெலியுமாறு இசைப் பாடலோடு
பகற்பொழுதைப் போக்கி, நூல்களின் மயக்கம் மெலியுமாறு நுணுகிய
உணர்வோடு, ஆராய்தலில் இரவுப் பொழுதைப் போக்க, இவ்வாறு
வானுலக இன்பமும் உவமையில் மெலியுமாறு இரு பொழுதுகளும் மாறி
மாறி வந்து கொண்டிருக்கும்.

     மலை - 'மலைவு' என்ற சொல்லின் கடைக்குறை. 'வான்' ஆகு
பெயராக வானுலக இன்பத்தைக் குறித்தது. 'நுண்' இகரச் சாரியை பெற்று
நுணி என்றாயிற்று.